புதுடெல்லி: முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோரின் மரண வழக்கை அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடி படுகொலை வழக்கை போன்று உச்சநீதிமன்ற நீதிபதி விசாரிக்க வேண்டும் என்று பாஜக எம்பி கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவம் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக முப்படை விசாரணை, விமானப்படையின் ஏர் மார்ஷல் மனவேந்திர சிங் தலைமையில் துவங்கியுள்ளது. ஆனால், இந்த விபத்து குறித்து முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் பல தலைவர்களும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்து பாஜக மூத்த தலைவரும், எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி இறந்துள்ளார். ஹெலிகாப்டரை இயக்கிய ஊழியர்கள் ராணுவத்தை சேர்ந்தவர்கள்.
எனவே ராணுவத்திற்கு எவ்வித அழுத்தமும் இருக்கக்கூடாது. ராணுவத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் விசாரணை அமைப்புகள் வழக்கு விசாரணை நடத்தக் கூடாது. உச்சநீதிமன்றத்தின் நீதிபதி தலைமையில் விசாரணை நடக்க வேண்டும். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடி படுகொலை செய்யப்பட்டபோது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் விசாரணை பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதுபோன்று வழக்கை விசாரிக்கும் அதிகாரிக்கு எவ்வித அழுத்தமும் இருக்கக் கூடாது.
உச்சநீதிமன்றத்தில் உள்ள பெரும்பாலான நீதிபதிகள் எவரின் அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காதவர்கள் என்று நம்புகிறேன். ஒன்றிய அரசு என்னுடைய பேச்சைக் கேட்குமா? இல்லையா? என்பதை பற்றி நான் கவலைப்படவில்லை. இவையெல்லாம் பொதுமக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்; அதற்காக பொதுமக்கள் காத்திருக்கிறார்கள் என்பது என்னுடைய கருத்து’ என்றார். ஒன்றிய அரசு முப்படையின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சுப்பிரமணியன் சுவாமி கருத்து கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.