×

வன்முறையை தூண்ட நினைப்பவர்களை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: அமைச்சர் பி.கே சேகர்பாபு பேட்டி

சென்னை: தமிழகத்தில் வன்முறையை தூண்ட நினைப்பவர்களை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ராஜாஜியின் 143வது பிறந்த நாளையொட்டி சென்னை பாரிமுனையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அங்கு அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த அவரது திருவுருவ படத்திற்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதன்பின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வரின் உத்தரவுபடி ஏற்கனவே விடுபட்ட விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு அரங்கம் அமைப்பது, சிலை அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கு பராமரிப்பதில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு அரசு திகழ்ந்து வருகிறது.

இந்த அமைதியை சீர்குலைக்க ஒரு சிலர் இணைய தளம் மற்றும் பல்வேறு வலைத்தளங்களில் விஷமத்தனத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டால் அதை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. முதலமைச்சரின் செயல்பாடுகளை நீதிபதிகளே தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். தமிழக மக்களும் தமிழக முதல்வரின் ஓய்வறியா பணியை எண்ணி தினம்தினம் மகிழ்ந்து வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முறையாக வாடகை செலுத்தாமல் நீண்டநாள் நிலுவையில் வைத்திருப்பவர்கள் மற்றும் கோயில் நிலத்தை முறைகேடாக ஆக்கிரமித்தவர்கள் ஆகியோர் மீது இதுவரை 487 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சுமார் 1500 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழ் வழி அர்ச்சனை என்ற திட்டம் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால் அத்திட்டம் மற்ற கோவில்களுக்கும் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும். கடந்தகால ஆட்சியாளர்களின் சீர்கெட்ட நிர்வாகத்தால் தமிழக அரசு பெரும் நிதி நெருக்கடியில் இருந்த நிலையில் கூட, தமிழக முதல்வர் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார்.

அதேபோல் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியிலும் மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட பணிகள் தினந்தோறும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மழைநீர் தேங்காமல் இருக்கவும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவும் போதிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவைகள் யாவும் குறித்த காலத்திற்கு முன்பாகவே நிச்சயம் நிறைவேற்றப்படும் .
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Nadu government ,Minister ,BK Sehgarbabu , Tamil Nadu government will never allow those who want to incite violence: Minister BK Sehgarbabu interview
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள்...