×

விடைபெற்றார் நாட்டின் வீரத் திருமகன் பிபின் ராவத்: தாய், தந்தை உடலுக்கு மகள்கள் தீ மூட்டினர்..பீரங்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை..!!

டெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் உடல் பீரங்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, உதவியாளர், பாதுகாப்பு கமாண்டோக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது. பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள், இன்று காலை டெல்லி காமராஜர் மார்க் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டது. அங்கு  உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து டெல்லியில் உள்ள பிரார் மயானத்தில் தகனம் செய்ய இருவரின் உடல்களும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இறுதி ஊர்வலம் சென்ற ராணுவ கவச வாகனத்தின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் தேசிய கொடியுடன் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, கண்டோன்மென்ட் மயானத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மதுலிகா ராவத்தின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. இருவரின் உடல்களுக்கு அவரது 2 மகள்கள் இறுதி சடங்குகளை செய்தனர். பிபின் ராவத், மனைவி மதுலிகாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர்சிங், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் மகள்கள், குடும்பத்தினர் உள்ளிட்டோரும் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். பிபின் ராவத்தின் உடல் மீது பொருத்தப்பட்டிருந்த தேசிய கொடி அவரது மகள்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் தகன மேடைக்கு பிபின் ராவத்தின் உடல் கொண்டு செல்லப்பட்டது. ஒரே தகன மேடையில் இருவரது உடல்களும் வைக்கப்பட்டன. தாய், தந்தை இருவரது உடல்களுக்கும் மகள்கள் தீ மூட்டினர். 17 சுற்று பீரங்கி குண்டுகள் முழங்க 800 வீரர்களின் மரியாதையுடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் உடல்  தகனம் செய்யப்பட்டது.


Tags : Bibin Ravat , Bipin Rawat, Madhulika Rawat, Military Honors, Cremation
× RELATED குன்னூரில் விபத்துக்குள்ளான...