×

தடுப்பூசி செலுத்தாத மாணவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க கூடாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்து அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில், சென்னையில் உள்ள கல்வி நிறுவன உயர் அலுவலர்கள் மற்றும் கல்வி நிறுவன நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உயர்கல்வி துறை செயலாளர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, பல்கலைக்கழக பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் கல்லூரிகளில் கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கவும், புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா பாதித்த அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று உறுதியாகவில்லை. கொரோனாவால் பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க, 18 வயது பூர்த்தியடைந்த கல்லூரி மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே கல்லூரி வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை செயலாளர் வழியாக உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிகளில் கலைநிகழ்ச்சி அல்லது மாணவர்கள் கூடும் விழாக்களுக்கு அனுமதியில்லை. பட்டமளிப்பு போன்ற அவசியமான நிகழ்வுக்கு அனுமதி அளிக்கப்படும். கல்லூரிகளில் உணவருந்த ஒரே நேரத்தில் மாணவர்களை அனுமதிக்க கூடாது  தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

வகுப்பறையில் கூட முகக்கவசம் மற்றும் இடைவெளி அவசியம். பல்வேறு நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தவர்களில், இதுவரை 16 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Tags : Minister ,Ma Subramaniam , Students who have not been vaccinated should not be allowed inside the college: Interview with Minister Ma Subramaniam
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...