×

கனமழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: கனமழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10.12.2021) கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சபாபதி தெருவில் இரண்டு மாடி குடியிருப்பு வீட்டின் முதல் தளம் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி, வெங்கடேஸ்வரா நகர், லஷ்மணன் நகர், அக்பர் சதுக்கம் மற்றும் ஜெயராம் நகர் ஆகிய இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி, வள்ளியம்மை தெரு மற்றும் ஜி.கே.எம். காலனி 12-வது தெரு ஆகிய தெருக்களில் பொதுமக்களை சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.

தமிழகத்தில் வரலாறு காணாத மழை பெய்த போதிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசால் போர்க்கால அடிப்படையில் வெள்ளப் பாதிப்புகள் விரைவாக சீர்செய்யப்பட்டது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர், கனமழை தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, நடைபெற்று வரும் சீரமைப்புப் மற்றும் நிவாரணப் பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, இன்று (10.12.2021) கொளத்தூர், திரு.வி.க. மண்டலத்தைச் சேர்ந்த சபாபதி தெருவில் 23.11.2021 அன்று இரண்டு மாடி குடியிருப்பு வீட்டின் முதல் தளம் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் காயமடைந்த திருமதி ஜெயலட்சுமி, திருமதி சுதா மற்றும் திருமதி மோகனா ஆகியோரது இல்லத்திற்கு நேரில் சென்று, நிதியுதவி வழங்கி, உடல்நலம் குறித்து விசாரித்து, ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து, முதலமைச்சர் வள்ளியம்மை தெருவில் பொதுமக்களை சந்தித்து, அவர்களது தேவைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது அப்பகுதி மக்கள் வெள்ளத் தடுப்புப் பணிகளை துரிதமாக மேற்கொண்டு, தேங்கிய மழைநீரை விரைவாக அகற்றியதற்கு நன்றி தெரிவித்தார்கள். மேலும், அப்பகுதியில் உள்ள கழிவுநீர் தொடர்பான பிரச்சனையை சீர்செய்திட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். அப்பகுதி மக்களின் கோரிக்கையினை துரிதமாக களைவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், ஜி.கே.எம். காலனி 11-வது தெருவில் முதலமைச்சர் பொதுமக்களை சந்தித்து, அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், சிவ இளங்கோ சாலையில் உள்ள வண்ணான்குட்டையை பார்வையிட்டு, குட்டையில் கழிவுநீர் கலக்காமல் இருக்கவும், அப்பகுதியில் மழைநீர் தேங்காமல் வெளியேற்றவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், கொளத்தூர், வெங்கடேஸ்வரா நகரிலுள்ள ஸ்கை மஹால், லஷ்மணன் நகர், அக்பர் சதுக்கம் மற்றும் ஜெயராம் நகர் 1-வது பிரதான சாலை ஆகிய இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்த ஆய்வின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் விஜயராஜ்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : CM ,Kolatur ,Q. Stalin , mk stalin
× RELATED கடந்த 10 ஆண்டுகாலமாக மாநில உரிமைகளை...