திருக்கோவிலூர் அருகே துணிகரம் விவசாயியை கயிற்றால் கட்டிப்போட்டு ₹6 லட்சம் நகை, பணம் கொள்ளை-மர்ம நபர்கள் 4 பேருக்கு வலை

திருக்கோவிலூர் : தனியாக வசித்து வந்த விவசாயியை கயிற்றால் கட்டிப்போட்டு பீரோவை உடைத்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மர்ம நபர்கள் 4 பேர் கொள்ளையடித்துச் சென்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த பழங்கூர் கிராமம் குப்பத்துமேடு பகுதியில் வசித்து வருபவர் அருளப்பன் மகன் செல்வநாதன் (87), விவசாயி. இவரது மனைவி ஆரோக்கியம் அம்மாள். கடந்த 40 வருடங்களாக தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களில் ஒரு மகன் சபரி, வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மற்ற இரு மகன்களான அந்தோணி, மரியதாஸ் ஆகிய இருவரும் மும்பையில் வேலை பார்த்துக்கொண்டு அங்கு குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். செல்வநாதன், மனைவியுடன் தனியே வசித்து வந்தார்.

கடந்த 5 மாதங்களுக்கு முன் ஆரோக்கியம் அம்மாள் மும்பையில் உள்ள மகன்களை பார்ப்பதற்காக சென்று விட்டார். இதனால் செல்வநாதன் தனியே வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர்கள் 4 ேபர் வெளிப்புற கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் 4 பேரும் வீட்டின் கதவையும் உடைத்து உள்ளே நுழைந்தனர். சத்தம் கேட்டதும் ஹாலில் படுத்திருந்த செல்வநாதன் எழுந்து பார்த்தார். உடனே மர்ம நபர்கள் 4 பேரும் செல்வநாதனின் கை, கால்களை அங்கிருந்த கயிற்றால் கட்டி சத்தம் போடாமல் இருப்பதற்காக வாயில் துணியை வைத்து அடைத்தனர். பின்னர் அவரிடம் பணம், நகை எங்கிருக்கிறது? பீரோ சாவியை கொடு என்று கேட்டு மிரட்டி உள்ளனர். அதற்கு அவர் சாவி என்னிடம் இல்லை, என் மனைவி எடுத்துக்கொண்டு மும்பை சென்றுவிட்டார் என்று கூறியுள்ளார்.

 உடனே மர்ம நபர்கள் அங்கிருந்த அரிவாளை எடுத்து செல்வநாதனின் கழுத்தில் வைத்து பணம், நகையை தராவிட்டால் உன்னை கொன்றுவிடுவோம் என்று மிரட்டி உள்ளனர். இதனால் பயந்துபோன அவர் என்னை கொன்றுவிடாதீர்கள் என்று கெஞ்சியுள்ளார்.பின்னர் இரும்பு ராடால் பீரோவை உடைத்த மர்ம நபர்கள் அதில் இருந்த செயின், மோதிரம், பிரேஸ்லெட் என 14 பவுன் நகைகள் மற்றும் பணம் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்ததோடு, செல்வநாதனின் கழுத்தில் அணிந்திருந்த செயினையும் பறித்துக்கொண்டனர்.

அவரது கால்சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் பணத்தையும் பறித்துக்கொண்டனர்.

பின்னர் மர்ம கும்பல் கிளம்பியபோது, செல்வநாதன் என்னிடம் செலவுக்கு கூட பணம் இல்லை, ஏதாவது கொடுத்து வி்டடு போங்கள் என்று கூறினார். உடனே ஆயிரம் ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்து மோதிரம் ஒன்றையும் கொடுத்துள்ளனர். பின்னர் அவரது செல்போனை எடுத்து வீட்டின் உள்ளே போட்டுவிட்டு செல்வநாதன் செல்போனை எடுக்க முடியாதவாறு அவரை அறைக்கு வெளியே விட்டு விட்டு தப்பிச்சென்றனர்.

பின்னர் மற்றொரு கதவு வழியாக வெளியே வந்த செல்வநாதன் சத்தம் போட்டார். இதைக்கேட்ட அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் ஓடிவந்து கொள்ளையர்களை தேடினர். ஆனால் பிடிக்க முடியவில்லை. கொள்ளைபோன நகைகள், பணத்தின் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும்.

தகவல் அறிந்த திருக்கோவிலூர் டிஎஸ்பி கங்காதரன், இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார், கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கள்ளக்குறிச்சியில் இருந்த தடயவியல் நிபுணர்கள் வந்து வீட்டில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாய் சாய்னா வரவழைக்கப்பட்டு விடப்பட்டது. வீட்டில் இருந்து வெளியே வந்த மோப்பநாய் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பஸ்நிறுத்தம் வரை சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்ைல. ஏற்கனவே கடந்த 3 வருடங்களுக்கு முன் செல்வநாதன், மனைவி ஆரோக்கியம் அம்மாளுடன் வீட்டில் இருந்தபோது கொள்ளையர்கள் வீடு புகுந்தனர். ஆனால் பொருட்களை கொள்ளையடிக்காமல் தப்பி ஓடிவிட்டனர்.

கேமரா கேபிளை அறுத்த கொள்ளையர்கள்

பணம், நகையை கொள்ளையடித்த கொள்ளையர்கள் அங்கிருந்த சிசிடிவி கேமராவை பார்த்துவிட்டனர். இதை வைத்து போலீசார் பிடித்து விடுவாரகள் என்று பயந்துபோன அவர்கள் மானிட்டரில் இருந்து ஹார்ட் டிஸ்க் பாக்சுக்கு செல்லும் கேபிளை அறுத்து விட்டு சென்றுவிட்டனர். ஆனால் ஏற்கனவே அவர்கள் முகம் கேமராவில் பதிவாகிவிட்டதால் போலீசார் அதனை எடுத்துச்சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் துப்பு துலங்கும் என்று தெரிகிறது.

Related Stories: