×

சிலம்ப வீரர்களுக்கு 3சதவீத ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பு அரசின் அறிவிப்பால் பாரம்பரிய கலையின் மீது பாய்ந்தது புத்தொளி! பயிற்சியாளர்கள் மகிழ்ச்சி

சேலம் : சிலம்ப விளையாட்டு வீரர்களுக்கு 3சதவீத ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்ற அரசு அறிவிப்பால்  பாரம்பரிய கலையின் மீது புத்தொளி பாய்ந்துள்ளது என்று பயிற்சியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விளையாட்டு வீரர்களின் சாதனைகளை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் வகையில் அரசுத்துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியிடங்களில் அவர்களுக்கு 3சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில்  பதக்கம் வென்ற நிலையில், 5ஆண்டுகளாக தமிழகத்தில் வசிக்கும் வீரர்கள் இந்த ஒதுக்கீட்டில் பயன்பெறலாம்.

கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் உள்ள 46விளையாட்டுகள் மற்றும் ஒலிம்பிக் அல்லாத 4விளையாட்டுகளான ரோலர் ஸ்கேட்டிங், ஸ்குவாஷ், கபடி, ஷஷூ ஆகியவை 3சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பரிசீலிக்க கூடிய விளையாட்டுகளாக உள்ளது. இந்நிலையில் சிலம்பம் விளையாட்டை இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்ப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது சிலம்பவீரர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு பயிற்சி வழங்க மையங்களை நாடி வர ஆரம்பித்துள்ளனர். இதனால் இளைய தலைமுறையினர் ஆர்வம் காட்டாத இந்த அரிய கலைக்கு புத்தொளி பரவி உள்ளது. மாய்ந்து கொண்டிருக்கும் தமிழர் பாரம்பரியம் மீண்டு வருவதற்கும் வழிபிறந்துள்ளது என்கின்றனர் மூத்தவீரர்கள்.
இது குறித்து தென்னக சிலம்ப பயிற்சியாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் கூறியதாவது:

சிலம்பம் என்பது தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஒரு பாரம்பரிய தற்காப்பு கலை. கம்புசுத்துதல் என்று கிராமப்புறங்களில் கூறுகின்றனர். நீண்ட கம்பை கையில் எடுத்து கால்அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மை பாதுகாத்துக் கொள்வதே இதன் அடிப்படை நோக்கம். ஆதிகாலத்தில் மக்கள் தங்களை சிங்கம், புலி போன்ற மிருகங்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள கையாண்ட முறையே சிலம்பம் ஆகும். அந்தக்காலத்தில் சண்டையிட ஈட்டி, கத்தி, வேல், வாள், கம்பு  போன்ற ஆயுதங்களை பயன்படுத்தினர். இதில் தமிழர்கள் ஆயுதம் ஏந்தி போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதம் தான். இதுவே பின்னர் சிலம்புக்கலையாக வளர்ச்சி பெற்றது.

மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, அன்னியர்களுக்கு நாம் அடிமைப்பட்ட காலத்தில் இந்த கலையின் பெயரும் பல்வேறு விதமாக மாற ஆரம்பித்தது. வடக்கன்களரி, தெற்கன்களரி, சுவடு அடிமுறை, கர்நாடக சுவடு, சிரமம், சைலாத், தஞ்சாவூர் குத்துவரிசை, நெடுங்கம்பு என்ற பெயர்களில் இந்த கலையானது மொழி, மதம், இனம் கடந்தும் பரவியது. ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவை இன்றும் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. சிலம்பக்கலை சுமார் 5ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அகத்திய முனிவர், 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தை குறிப்பிட்டுள்ளார். திருக்குறள், கலிங்கத்துப்பரணி, திருவிளையாடல் புராண நூல்களிலும் சிலம்பம் குறித்த குறிப்புகள் உள்ளன. ஊமைத்துரை சுருள்பட்டா வீசுவதிலும், கட்டபொம்மன்  நெடுங்கம்பு வீசுவதிலும், சின்னமருது வளரி வீசுவதிலும் வல்லவர்கள் என்று அவர்களின் வாழ்க்கை வரலாற்று குறிப்புகள் கூறுகிறது.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட சிலம்பம் என்பது, கடந்த சில ஆண்டுளாக கிராமப்புற கோயில் திருவிழாக்களில் மட்டுமே கவனம் ஈர்க்கும் கலையாக மாறிநிற்கிறது. இதரவிளையாட்டுகளை போல, இந்த கலையை கற்றுக் கொள்ள இளைய தலைமுறையினர் ஆர்வம் காட்டவில்லை. இப்படிப்பட்ட நிலையில் தமிழக அரசு, சிலம்பாட்ட வீரர்களுக்கு 3சதவீத ஒதுக்கீட்டில் இடம் அளித்திருப்பது புதிய விடியலை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கலை குறித்து அறிந்து கொள்ளவும், கற்றுக்கொள்ளவும் ஆர்வம் அதிகரித்துள்ளது. கிராமப்புற சிலம்பக்கூடங்களில் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் என்று பெரும்பாலானவர்கள் திரண்டு வருகின்றனர். இதனால் நிச்சயமாக எதிர்காலத்தில் சிலம்ப விளையாட்டும் உலகளவில்  கவனம் ஈர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

தன்னம்பிக்கையை கண்களில் காணலாம்

சிலம்பத்தில் ஒத்தைசுவடு, பிரிவுச்சுவடு, ரெட்டுவீச்சு, பூட்டுப்பிரிவு, மடுசிரமம், எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள்வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி  போன்ற ஆயுதப்பிரிவுகளும் உள்ளன. பொதுவாக எந்த ஒரு வீரக்கலையிலும் உணர்வுகளை முகத்திலோ அல்லது உடல்மொழியிலோ வெளிப்படுத்தும் தன்மைகள் இருக்காது. எதிரி நம் மனநிலையை அறிந்துவிடக்கூடாது என்பதே இதற்கான காரணம். ஆனால் சிலம்ப விளையாட்டை பொறுத்தவரை திறம்பட பயிற்சி செய்த ஒருவரின் தன்னம்பிக்கையை கண்களிலும், உடல்அசைவிலும் கண்டுகொள்ளலாம்  என்பதும் சிறப்பு என்கின்றனர் மூத்த பயிற்சியாளர்கள்.

Tags : Government ,Chilamba , Salem: Government announces 3 per cent quota for Chilamba athletes
× RELATED நோயாளிகளின் மன அமைதிக்காக அரசு மருத்துவமனையில் புத்தர் சிலை