விழுப்புரம் அருகே ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை!: நடத்துனர், ஓட்டுனரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி..!!

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடத்துனர், ஓட்டுனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். விழுப்புரத்தில் இருந்து கொத்தமங்கலம் நோக்கி  நேற்று இரவு சென்று கொண்டிருந்த 27 என்கிற தடம் எண் கொண்ட அரசு பேருந்தில் பலர் பயணம் செய்துள்ளனர். அனைவரும் பெரும்பாக்கம் என்கின்ற கிராமத்தில் இறங்கிவிட 20 வயதான கல்லூரி மாணவி மட்டும் பேருந்தில் தனியாக பயணித்ததாக கூறப்படுகிறது.

அப்போது அப்பெண்ணுக்கு நடத்துனர் சிலம்பரசன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காணை காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததன் பேரில், பாலியல் தொந்தரவு கொடுத்த நடத்துனர் சிலம்பரசன்  மற்றும் உடந்தையாக இருந்த அரசு பேருந்து ஓட்டுநர் அன்பு செல்வன் ஆகிய இருவரையும் கைது செய்து  போலீசார் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இளம் பெண்ணுக்கு நடத்துனர் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, நடத்துனர் சிலம்பரசன், ஓட்டுநர் அன்புச்செல்வன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அரசு பேருந்து நடத்துனர் சிலம்பரசன், ஓட்டுனர் அன்புச்செல்வனை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் ஆட்சியர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: