×

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை வழக்கானது சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டிருக்கிறது. வேளச்சேரி போலீசார் விசாரித்து வந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி  டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். முன்னாள் தலைவர் வெங்கடாசலம் மீது கடந்த செப்டம்பர் மாதம் லஞ்சஒழிப்புத்துறை அதிரடியாக வழக்குப்பதிவு செய்தது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக சோதனை நடத்தியதில் கிலோ கணக்கில் தங்கமும், 13 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணமும், கிலோ கணக்கில் சந்தனக்கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் போது திடீரென கடந்த 2ம் தேதி வேளச்சேரியில் உள்ள வீட்டின் முதல் தலத்தில் வெங்கடாசலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தொடர்ந்து, தற்கொலைக்கான காரணம் குறித்து வேளச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை கடிதமும் கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும் வெங்கடாச்சலத்தின் செல்போன், டேப்கள் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டு அதில் ஏதேனும் ஆதாரங்கள் கிடைக்கின்றனவா என்பது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால் முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை வழக்கை வேளச்சேரி காவல் நிலையத்தில் இருந்து சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்துவார்கள். குறிப்பாக தற்கொலைக்கான காரணம் என்ன?. விசாரணைக்கு அஞ்சி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா?. அதிகாரிகள் ஏதேனும் அழுத்தம் கொடுத்தார்களா? என்பது குறித்து விசாரணை செய்யப்படும். வேளச்சேரி காவல்துறையினரும் வெங்கடாசலம் தற்கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களையும், ஆதாரங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.


Tags : Tamil Nadu Pollution Control Board ,Venkatachalam ,CPCIT ,DGP ,Silenthrababu , Venkatachalam, Suicide, CPCIT, DGP Silenthrababu
× RELATED ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற...