நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை விபத்துகளில் 48,000 பேர் உயிரிழப்பு: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

டெல்லி: நாடு முழுவதும் கடந்த ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 48,000 பேர் உயிரிழந்ததாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இந்த தகவல்களை ஒன்றிய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார். விரைவு சாலைகள் உள்பட தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்துள்ள சாலை விபத்துகளுக்கான பல்வேறு காரணங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார். கேள்வி ஒன்றிற்கு அவர் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், வாகனங்களின் வடிவமைப்பு, சாலை அமைக்கப்பட்ட பொறியியல் காரணங்கள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, போதை பொருள் உட்கொண்டது, அதிவேகம், தவறான பக்கத்தில் வாகனத்தை ஓட்டி சென்றது, சிவப்பு விளக்கை எரியவிட்டதில் ஏற்பட்ட தவறு உள்ளிட்ட காரணங்களால் சாலை விபத்துகள் நேரிட்டதாக நிதின் கட்கரி கூறியுள்ளார்.

2019ம் ஆண்டு விரைவு சாலைகள் உள்பட, தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 53,872 பேர் மரணமடைந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். விபத்துகளை தவிர்க்கவும், சாலை பாதுகாப்புகளை மேம்படுத்தவும், வாகனங்கள் வடிவமைப்பு முதல் பல்வேறு கட்டங்களில் தணிக்கை செய்வது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கப்பட இருப்பதாக நிதின் கட்கரி கூறியுள்ளார். இதற்காக தனியார் வல்லுனர்களின் உதவி நாடப்பட்டுள்ளதாக நிதின் கட்கரி கூறியுள்ளார்.

Related Stories: