×

இறக்குமதி ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு வரி டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து தனிநபர்கள் இறக்குமதி செய்யும் ஆக்சிஜன் செறிவூட்டிக்கு 12 சதவீதம் ஐஜிஎஸ்டி வரி விதித்த மத்திய அரசின் உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்ததற்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் நோயால் அதிகம் பாதித்து மூச்சுத் திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு, அவர்களின் உயிரை காக்க ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் மூலம் ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. இந்நிலையில், வௌிநாடுகளில் இருந்து தனிநபர்கள் இந்த செறிவூட்டி கருவிகளை இறக்குமதி செய்தால், அதற்கு 12 சதவீதம் ஐஜிஎஸ்டி  எனப்படும் வரி விதிக்கப்படும் என மத்திய அரசு கடந்த மாதம் 1ம் தேதி அறிவித்தது.இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் பொதுநலன் வழக்குகள் தொடர்ந்தனர். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தல் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. இது, நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ‘‘வரும் 8ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. அதில், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி.யில்  இருந்து விலக்கு வழங்குவது பற்றி ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை தனிநபர்கள் வாங்கி பரிசு பொருட்களாக தருகின்றனர். அதற்கு ஏன் வரிவிலக்கு வழங்க வேண்டும்? எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,’’ என்றார். பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “மத்திய அரசின் வாதங்களை ஏற்று, டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த மேல்முறையீட்டு மனு வுக்கு பதிலளிக்க, எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது,’’ என்றனர். பின்னர், விசாரணையை ஒத்திவைத்தனர்….

The post இறக்குமதி ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு வரி டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi High Court ,New Delhi ,government ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு