×

அயோத்திகுப்பம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் 4வது மாடியில் இருந்து வீசி சிப்பிப்பாறை நாய் கொலை: உரிமையாளர் புகாரில் போதை வாலிபர் கைது

சென்னை: அயோத்திகுப்பம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் விளையாடுவது போல் நடித்து, 4வது மாடியில் இருந்து வீசி சிப்பிப்பாறை நாயை கொன்ற போதை ஆசாமி ஒருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை அயோத்தி குப்பம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பிரவீன் (24). இவர், சிப்பிப்பாறை வகையை சேர்ந்த நாய் ஒன்றை விலைக்கு வாங்கி தனது வீட்டில் ஆசை ஆசையாக வளர்த்து வந்தார். அந்த நாய், பிரவீன் குடும்பத்தினருடன் நெருங்கி பழகி வந்துள்ளது. இதனால் பிரவீன் குடியிருக்கும் பகுதியில் வெளியாட்கள் யார் வந்தாலும் அவர்களை உள்ளே அனுமதிக்காது.

இது வெளியில் இருந்து குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதிக்கு வரும் நபர்களுக்கு தடையாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு குடியிருப்பின் 4வது மாடியில் தனது குடும்பத்தினருடன் நாய் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது, வெளியில் இருந்து நண்பர்களை பார்க்க வந்த சிலர் குடிபோதையில் நாய்க்கு பிஸ்கெட் கொடுத்து விளையாடியுள்ளனர். அப்போது நாயிடம் விளையாடிய போதை நபர் பழிவாங்கும் நோக்கில், நாயை தூக்கி நான்காவது மாடியில் இருந்து கீழே வீசியுள்ளார். இதில் தலையில் அடிபட்டு நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பிரவீன் தனது நாயை கொன்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல் விலங்குகள் பாதுகாப்பு  அமைப்பிடமும் புகார் அளித்தார். அப்போது குற்றவாளிகளை போலீசார் கைது செய்யும் வரை எனது நாய்க்கு இறுதி சடங்கு செய்ய மாட்டேன் என்று பிடிவாதமாக பிரவீன் இருந்துள்ளார். அதைதொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குடிபோதையில் நாயை 4வது மாடியில் இருந்து வீசி கொன்ற சேப்பாக்கம் லாக்நகரை சேர்ந்த ஸ்டேர்லின் (35) என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அயோத்தி குப்பம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Ayodhya Kuppam ,Housing Board , Oyster dog killed after being thrown from 4th floor of Ayodhya Kuppam Housing Board flat: Drug boy arrested on owner's complaint
× RELATED தேர்தல் பிரசாரத்தின் போது பாம்பை...