இபிஎஸ், ஓபிஎஸ் வாகனம் மீது செருப்பு வீச்சு அமமுகவை சேர்ந்த 3 நிர்வாகிகள் கைது: அண்ணாசதுக்கம் போலீசார் நடவடிக்கை

சென்னை: ஜெயலலிதா நினைவு நாளில் அஞ்சலி செலுத்த வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் வாகனங்களை வழி மறித்து செருப்புகளை வீசி தாக்குதல் நடத்திய விவகாரத்தில் அமமுக நிர்வாகிகள் 3 பேரை அண்ணாசதுக்கம் போலீசார் கைது செய்தனர்.அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 5ம் தேதி முன்தினம் அனுசரிக்கப்பட்டது. இதனால் அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. குறிப்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்படி கே.பழனிசாமி ஆகியோர் மலரஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும் போது சிலர் நுழைவு வாயிலில் நின்று கற்கள் மற்றும் செருப்புகளை கொண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து அண்ணாசதுக்கம் காவல் நியைத்தில் மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தை சேர்ந்த ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மாறன் என்பவர் புகார் அளித்தார். அதன்படி அண்ணாசதுக்கம் போலீசார் தாக்குதல் நடத்திய நபர்கள் மீது ஐபிசி 148, 294(பி), 323, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிசிடிவி பதிவுகளை வைத்து அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர்.

அதில், அமமுகவின் சென்னை 114 கிழக்கு வட்ட செயலாளர் சுதாகர், 114 வது மேற்கு வட்ட செயலாளர் அற்புதராஜ், 63வது தெற்கு வட்ட செயலாளர் மதுசூதனன் ஆகிய 3 பேரை நேற்று அதிகாலை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். மேலும், தலைமறைவாக உள்ள நபர்களை சிசிடிவி பதிவுகளின் படி போலீசார் கைது ெசய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: