×

குளச்சலை தொடர்ந்து நாகர்கோவிலில் சம்பவம் அரசு பஸ்சில் இருந்து குறவர் குடும்பத்தினரை இறக்கிய கண்டக்டர்: வீடியோ வைரலால் பரபரப்பு

நாகர்கோவில்: குளச்சலில் மீன் விற்பனை செய்யும் பெண் செல்வமேரி அம்மாள் என்பவரை அரசு பஸ்சில் இருந்து இறக்கிவிட்ட சம்பவமும், இது தொடர்பாக அவர் ஆதங்கப்படும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த அரசு பஸ் கண்டக்டர் உட்பட 3 பேரை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.  அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் மீன் விற்பனை செய்யும் பெண்மணி செல்வமேரி அம்மாளிடம் நேரில் சென்று வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘மகளிர் மேம்பாட்டுக்காக கட்டணமில்லா உரிமைச்சீட்டை வழங்கி அதை நடத்துநர்கள் திறம்பட செயல்படுத்தி வரும் இக்காலத்தில் ஒரு நடத்துனரின் செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது, எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

பஸ்சில் இருந்து இறக்கி விட்டவர்களுக்கு தண்டனை ஏதும் கொடுக்க வேண்டாம் என்று செல்வமேரி அம்மாள் பெருந்தன்மையுடன் பின்னர் கூறினார். இந்தநிலையில் நாகர்கோவில் - திருநெல்வேலி பஸ்சில் குறவர் குடும்பம் ஒன்று நேற்று பயணம் செய்தது. கண்டக்டர் திடீரென விசில் அடித்து நிறுத்தி, பார்வை குறைபாடுடைய கணவர், மனைவி, குழந்தை ஆகிய குறவர் குடும்பத்தினரை கீழே இறக்கி விட்டதுடன், அவரது உடமையையும் தூக்கி எறிந்துள்ளார். உடனே ஆட்டோ டிரைவர் ஒருவர் அவர்களுக்கு உதவி இருக்கிறார்.  இதனை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகளும், போலீசாரும் இதுபற்றி விசாரணை நடத்தியதோடு, சம்பந்தப்பட்ட குறவர் குடும்பத்தினரை தேடிவருகின்றனர்.

இவர்கள் வள்ளியூரை சேர்ந்தவர்கள் என்றும், வடசேரி பஸ் நிலைய பகுதிகளில் பிச்சை எடுத்து வந்தவர்கள், அங்கிருந்து பஸ்சில் ஏறியதும் கணவர்- மனைவி இருவரும் சண்டைபோட்டுக் கொண்டிருந்ததாகவும், கணவர் போதையில் இருந்ததாகவும், குழந்தை அழுது கொண்டிருந்ததாகவும் அதனால் பயணிகள் சத்தம்போடவே அவர்களை கண்டக்டர் பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் இறக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.கோயில்களில் குறவர் குடும்பத்தினருக்கு அன்னதானம் மறுக்கப்படுவதாகவும், தாங்கள் அவமதிக்கப்படுவதாகவும் மாமல்லை பகுதியில் அஸ்வினி என்பவர் புகார் தெரிவித்த நிலையில், முதல்வர் அவரது வீட்டிற்கே சென்று பார்வையிட்டதுடன் தமிழ்நாடு முழுவதும் இம்மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க கூறியுள்ளேன் என்று தெரிவித்திருந்தார். இந்தநிலையில் நாகர்கோவில் அருகே குறவர் குடும்பத்தினரை பஸ்சில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Nagercoil , Incident in Nagercoil following the flood Less from the government bus The conductor who dropped the family: The video went viral
× RELATED நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை