மாமல்லபுரத்தில் தயாராகும் ஒரே கல்லில் 15 டன் எடை ராட்சத வண்டு சிலை: அயர்லாந்து நாட்டு பூங்காவில் அமைக்க திட்டம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக்கலைக் கூடத்தில் அயர்லாந்து நாட்டில் உள்ள இந்திய ஸ்கல்ப்ச்சர் பூங்காவில் அமைப்பதற்காக, 15 டன் எடையில் ஒரே கல்லில் ஏழரை அடி உயரம், 10 அடி நீளம் கொண்ட ராட்சத சாணி வண்டு செதுக்கப்படுகிறது. இந்த, வண்டு எகிப்து நாட்டினர் பலர்  கடவுளாக நினைத்து தங்கள் கழுத்தில் டாலராக அணிந்துள்ளனர். இந்த வண்டு, எந்தவொரு பூச்சிகளின் உதவியின்றி சாணியை உருட்டி சென்று, மழை காலங்களில் வெளியே வராமல், அதனை பாதுகாத்து வைத்து சாப்பிடும். கல்லினால் வடிவமைக்கப்பட்டுள்ள வண்டு உடலில் உள்ள சாணி உருண்டையின் மீது பல்வேறு நாடுகளில் வாழ்ந்து மறைந்த தத்துவ ஞானிகளின், மருத்துவ முன்னோடிகளின் பெயர்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இதனை, சற்று தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு நிஜ வண்டு போல் காட்சியளிக்கிறது. சிற்பக்கலைஞர் முருகன் என்பவர் தலைமையில் 10 சிற்பிகள், கடந்த 18 மாதமாக இந்த வண்டு சிலையை வடிவமைக்கின்றனர்.அயர்லாந்து நாட்டில் சிற்ப கலை மீது ஆர்வம் கொண்ட விக்டர் வே (82), என்பவர், அந்நாட்டில் அமைத்துள்ள இந்திய கல்ப்ச்சர் பூங்காவில், அந்நாட்டு மக்கள் கண்டு மகிழும் வகையில் இந்த ராட்சத வண்டு சிலையை வைக்க உள்ளார். வரும் ஜனவரி மாதம் மாமல்லபுரத்தில் இருந்து கன்டெய்னர் மூலம், இந்த சிலை, சென்னை துறைமுகத்துக்கு கொண்டு சென்று, அங்கிருந்து கப்பல் மூலம் அயர்லாந்து நாட்டுக்கு செல்ல இருப்பதாக சிற்பி முருகன் தெரிவித்தார்.

Related Stories: