கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு தலா 50,000 நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: சென்னையில் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு தலா 50,000 நிவாரண நிதிக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: கொரோனா நோய் தொற்று காரணமாக மார்ச் 2020 முதல் இதுவரை 27,31,945 பேர் பாதிக்கப்பட்டு 26,87,414 பேர் குணமடைந்துள்ளனர், 36,549 பேர் நோய் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர். நடப்பு நிதியாண்டில் (2021-22) கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக இதுவரை 83,98.18 கோடி மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழக அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களது குடும்பங்களின் துயர் துடைக்கும் வகையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 50,000 என மொத்தம் 182.74 கோடி நிவாரணத் தொகை வழங்க தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கும் தலா 50,000 நிவாரணமாக வழங்கப்படும்.  

 கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்தினர் கொரோனா தொற்றினால் இறந்ததற்கான இறப்பு சான்று வைத்திருப்பின் https://www.tn.gov.in இணையவழியாகவும், அருகில் இருக்கும் இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். கொரோனாவால் உயிரிழந்தவர்களது குடும்பங்களுக்கு நிவாரணம் கோரி வரப்பெறும் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து நிவாரணம் வழங்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா நிவாரணம் கோரி வரப்பெறும் விண்ணங்களை பரிசீலனை செய்து தகுதியுள்ள இனங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கும் வகையில், சென்னை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ50,000 நிவாரண நிதிக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். நிகழ்வின்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை குமார் ஜெயந்த், பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி, சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயா ராணி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: