வட கிழக்கு பருவ காற்று நீடிப்பு தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: வட கிழக்கு பருவக் காற்று பலமாக வீசுவதை அடுத்து, தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், வட கிழக்கு திசையில் இருந்து பருவக் காற்று பலமாக வீசி வருகிறது. பொதுவாக காற்று சுழற்சியே, காற்றழுத்தமோ தமிழகத்தை ஒட்டி அமைந்தால் பருவக் காற்று வலுவாக வரும். தற்போது சுமத்ரா தீவு அருகே ஒரு காற்று சுழற்சி நீடித்து வருகிறது. இது மேற்கு நோக்கி நகரும். இது பெரிய அளவில் வலுவடைந்து இலங்கை மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களுக்கு  நல்ல மழை கொடுக்கும் வகையில் இருக்கும். அதாவது, விட்டு விட்டு மழை பெய்யும். பனிப்பொழிவுடன் இணைந்த மேகங்கள் காணப்படும் என்பதால் வெயில் வந்து வெப்பம் வந்ததும் அது தூறல் மழையாக மாறும்.

இதன்படி இன்று காலையில் பனிப் பொழிவு இருந்தாலும் 10 மணிக்கு மேல் வெயில் மற்றும் வெப்பம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 15ம் தேதி வரை லேசான மிதமான மழை பெய்யும். இந்நிலையில், வட மாநிலங்களில் இருந்து குளிர் அலைக்காற்று கடல் பரப்பில் இருக்கும் என்பதால் வட உள் மாவட்டங்களில் பனிப் பொழிவு இருக்கும். வரும் 13, 14ம் தேதிகளில் வெயில் வந்தால்தான் மழை பெய்யும் சூழல் ஏற்படும். அதிகாலை நேரங்களில் கடலோரப் பகுதியில் லேசான மழை இருக்கும், தென் மாவட்டங்களிலும் மழை பெய்யும். உள் மாவட்டங்களில் பனிப்பொழிவுடன் கூடிய தூறல் இருக்கும். கிழக்குப் பகுதியில் இருந்து வரும் காற்றின் காரணமாக கடலோர மாவட்டங்களில்  15ம் தேதி வரை அளவான மழை பெய்யும்.  பாதிப்பை ஏற்படுத்தும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இல்லை. இந்த சூழலின் காரணமாக இன்று அரியலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். மேலும், 10, 11, 12ம் தேதிகளில் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைபெய்யும்.

Related Stories: