ரூ.200 கோடி மோசடி புகாரில் நடிகை ஜாகுலின் பெர்னாண்டஸ் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்: துருவித்துருவி கேள்வி கேட்கும் அதிகாரிகள்..!!

டெல்லி: மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரின் 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை ஜாகுலின் பெர்னாண்டஸ் ஆஜராகியுள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பான லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் டெல்லி சிறையில் இருந்துகொண்டே பிரபல மருந்து நிறுவன உரிமையாளர், மனைவியை ஏமாற்றி 200 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டார். இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதன் அடிப்படையில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் மோசடியில் தொடர்புடைய அவருடைய மனைவியும் நடிகையுமான லீனா மரியப்பால் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. சுகேஷ் சந்திரசேகரின் மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த 7,000 பக்க குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாகுலின் பெர்னாண்டஸ் பெயரும் இடம் பெற்றிருந்தது. குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டதை அடுத்து ஜாகுலின் நாட்டை விட்டு வெளியேறாமல் தடுக்கும் வகையில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இதனால் வெளிநாடு செல்ல முயன்ற அவர், சில தினங்களுக்கு முன்னர் தடுத்து நிறுத்தப்பட்டார். இதையடுத்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகக் கோரி ஜாகுலின் பெர்னாண்டஸுக்கு புதிய சம்மன் அனுப்பப்பட்டது. சம்மனை அடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை அவர் ஆஜரானார். அவரிடம் சுகேஷ் சந்திரசேகரின் 200 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக அதிகாரிகள் துருவி துருவி கேள்வி எழுப்பி வருகின்றனர். சுகேஷ் ரூ.10 கோடி பரிசுப்பொருள் கொடுத்தது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

Related Stories: