×

நாகலாந்து படுகொலைக்கு வருத்தம் தெரிவிப்பது மட்டுமே போதாது :மக்கள் கொல்லப்படுவதை தவிர்க்க உறுதியான நடவடிக்கை தேவை : சோனியா காந்தி!!

டெல்லி : விவசாயிகள் பிரச்சனை, எல்லை விவகாரம் குறித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முழுமையான அளவில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 8வது நாளை எட்டியுள்ள நிலையில், அடுத்த கட்டமாக 2 அவைகளிலும் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை ஏற்று பேசிய சோனியா காந்தி, ஒன்றிய பாஜக அரசின் செயல்பாடுகளால் விவசாயிகள், சாதராண மக்கள் என அனைவரும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி இருப்பதாக சாடியுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றதால் ஒவ்வொரு குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட் கடுமையாக ஏறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி போராட்டக்களத்தில் 700 விவசாயிகள் உயிரிழந்ததை சுட்டிக் காட்டியுள்ள சோனியா, விவசாயிகளின் தியாகத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று கூறினார். உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். விவசாயிகள் பிரச்சனை, எல்லைப் பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முழுமையான அளவில் விவாதிக்க வேண்டும் என்றும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

நாகலாந்து பிரச்சனைக்கு வருத்தம் தெரிவிப்பது மட்டும் போதாது என்று கூறியுள்ள அவர், அப்பாவி மக்கள் கொலை செய்யப்படுவதை தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். 12 எம்பிக்களுக்கு எதிரான இடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்த விவகாரங்களை முன்வைத்து நாடாளுமன்றத்தில் தொடர் குரல் எழுப்பிய எம்பிக்களை அவர் அறிவுறுத்தினார்.  


Tags : Nagaland massacre ,Sonia Gandhi , விவசாயிகள்
× RELATED மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!!