×

ஓமிக்ரான் வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது... உயிரிழப்பு விகிதமும் மிக மிக குறைவு : தென் ஆப்பிரிக்க மருத்துவ கழகம் தகவல்


டெல்லி : உலகை அச்சுறுத்தி வரும் உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் கடந்த 25ம் தேதி கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஓமிக்ரான் 10 நாட்களில் 38 நாடுகளில் பரவி அதிர வைத்துள்ளது. இந்தியாவில் முதலில் கர்நாடகாவில் பரவிய இந்த தொற்று தற்போது மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதுமாக 23 பேருக்கு ஓமிக்ரான் உறுதி ஆகி இருக்கும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு வரும் பிப்ரவரி மாதம் 3வது அலையாக தாக்கும் வாய்ப்புகள் இருப்பதாக ஐஐடி நிபுணர்கள் எச்சரித்தனர்.

ஆனால் கடந்த 2 வாரங்களாக உலகை மிரட்டி வரும் ஓமிக்ரான் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று அந்த வைரஸ் உருவான தென் ஆப்பிரிக்கா நாட்டின் மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. ஓமிக்ரான் கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் தரவுகளை ஆராய்ந்த போது இது தெரிய வந்து இருப்பதாக கூறி உள்ள தென் ஆப்பிரிக்க மருத்துவ ஆராய்ச்சி கழகம் உயிரிழப்பு விகிதமும் மிக குறைவு என்று கூறி இருப்பது சற்று ஆறுதலை தருவதாக உள்ளது. 2வது அலையின் போது ஆக்சிஜன் தேவை அதிகரித்து பற்றாக்குறை மிகப்பெரிய அளவில் பிரச்சனை ஏற்படுத்தியதை சுட்டிக் காட்டிய மருத்துவ நிபுணர்கள் ஆனால் தற்போது சிகிச்சைக்கு ஆக்சிஜன் தேவை இருக்காது என்று தெரிவித்துள்ளனர். எனினும் 2 -3 வாரங்களில் நிலைமை மாறலாம் என்று எச்சரிக்கை விடுத்து இருக்கும் அவர்கள், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடித்தால் தாக்குதலில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தி உள்ளனர்.


Tags : South African Medical Corporation , ஓமிக்ரான்
× RELATED அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி...