திருப்போரூர் பேரூராட்சியில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை

திருப்போரூர்: பாதாள சாக்கடை பணி மற்றும் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளால், திருப்போரூர் பகுதி தூசி மண்டலமாக மாறிவிட்டது. இதனை, உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூர் பேரூராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. குறிப்பாக, நான்கு மாடவீதிகள், பழைய மாமல்லபுரம் சாலை ஆகிய இடங்களில் தெருக்களின் நடுவில் பள்ளம் தோண்டி, குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது. அதில், திருப்போரூர் ரவுண்டானா முதல் இள்ளலூர் சந்திப்பு வரை பழைய மாமல்லபுரம் சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படவில்லை.மேலும், கடந்த  ஒரு மாதமாக பெய்த கனமழையின் காரணமாக பழைய மாமல்லபுரம் சாலை அதிகமாக சேதமடைந்துள்ளது. நாவலூர், படூர், தையூர், கேளம்பாக்கம், காலவாக்கம், கண்ணகப்பட்டு, திருப்போரூர், இள்ளலூர் சந்திப்பு பகுதிகளில் பிரமாண்ட பள்ளங்கள் சாலையில் உருவாகிவிட்டன. சாலையில் வெள்ளநீர் சென்றதால் ஓஎம்ஆர் சாலையில் உள்ள தார் மற்றும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மண் சாலையாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான வாகனங்கள் இச்சாலையில் செல்லும்போது பழைய மாமல்லபுரம் சாலை தூசி மண்டலமாக மாறி விடுகிறது. இதனால், பைக்கில் செல்வோர், சாலையில் நடந்து செல்வோர் மட்டுமின்றி பஸ்கள், லாரிகளில் செல்லும் டிரைவர்களும் கடும் அவதியடைகின்றனர். இந்த, பாதாள சாக்கடை பணிகள் தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. மழை ஓய்ந்து, வெயில் அடிக்க தொடங்கியும், சாலையில் உள்ள மண்ணை அகற்றவோ பள்ளங்களை மூடவே இது வரை, அந்த ஒப்பந்த நிறுவனம்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து செயல்படுத்த சென்னை கழிவுநீரகற்று வாரியமும், செங்கல்பட்டு மாவட்ட நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து ஓஎம்ஆர் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: