புதுடெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் செய்த காலதாமதத்தை ஏற்க முடியாது என கடும் அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து விரைந்து முடிவெடுக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்யும் முழு அதிகாரம் மாநில ஆளுநருக்கு உண்டு என உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், இதற்கு ஒன்றிய அரசும், சிபிஐ.யும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இவர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழக அமைச்சரவை செய்த பரிந்துரையை கூட ஜனாதிபதி கடந்த 2017ம் ஆண்டு நிராகரித்தார்.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், ‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டுக்கான பேட்டரியை நான் வாங்கி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான ஒரு ஆதாரத்தை கூட சிபிஐ இதுவரை கொடுக்கவில்லை. அதனால் ,இந்த வழக்கில் எனக்கு கொடுக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து, என்னை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்,’ என கோரினார். இதை விசாரித்த நீதிமன்றம் சிபிஐ.க்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும், இந்த வழக்கில் தனது நிலைப்பாட்டை தமிழக ஆளுநர் தெரிவிக்கும்படியும் உத்தரவிட்டது. அதன்படி, முந்தைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடந்த பிப்ரவரி 4ம் தேதி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். அதில், ‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான முழு அதிகாரமும் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது. மாநில ஆளுநர் என்ற முறையில் நான் தலையிட முடியாது,’ என தெரிவிதார். பல மாதங்களாக கிடப்பில் இருந்த இந்த வழக்கு, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் மற்றும் நாகரத்னா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்கும்படி கோரினார். இதை நிராகரித்த நீதிபதிகள், ‘இந்த விவகாரம் முடிவு எடுக்கப்படாமல் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. பேரறிவாளன் விடுதலை தொடர்பான அமைச்சரவையின் பரிந்துரை மீது மாநில ஆளுநர் முடிவு எடுப்பார் என முதலில் கூறப்பட்டது. ஆனால், அவர் அந்த முடிவை ஜனாதிபதி எடுப்பார், எனக்கு அதிகாரம் இல்லை எனக் கூறியுள்ளார். இப்போது வரையில் இந்த பிரச்னையில் ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கடந்த 2018ம் ஆண்டு கொடுத்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இந்தாண்டு பிப்ரவரியில்தான் தனக்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் காலம் தாழ்த்தியது எந்த வகையிலும் ஏற்க முடியாது. இது அதிருப்தி அளிக்கிறது. இதில். ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது என்றாலும் கூட, அதற்கென்று ஒரு காலக்கெடுவும், வரையறையும் உள்ளது. அதனால், பேரறிவாளன் விவகாரத்தில் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து நீதிமன்றத்திற்கு தெரிய வேண்டும். அரசியல் சாசன சட்டம் 72ன்படி பேரறிவாளனை ஜனாதிபதி தன்னிச்சையாக நேரடியாக விடுதலை செய்ய அதிகாரம் இருக்கிறதா?, இல்லையா? என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது,’ என தெரிவித்தனர்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ராகேஷ் துவேதி, ஜோசப் அரிஸ்டாட்டில், ‘ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர். ஆனால், இந்த விவகாரத்தில் அமைச்சரவை பரிந்துரை மீது உரிய அவர் நேரத்தில் முடிவை எடுக்காமல் காலம் தாழ்த்தி விட்டார்,’ என்று குற்றச்சாட்டினார். பேரறிவாளன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன், ‘‘பேரறிவாளன் மீதான குற்றச்சாட்டில் ஒரு ஆதாரத்தை கூட சிபிஐ.யால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியவில்லை. அதனால், வழக்கில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும். மாநில ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தரவு பிறப்பித்தும், அவர் அதனை கருத்தில் கொள்ளவில்லை.
இந்த விவகாரம் ஒன்றிய அரசு, சிபிஐ.யால் இழுத்தடிக்கப்படுவதால், வழக்கில் இறுதி முடிவு ஏற்படும் வரையில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்,’ என தெரிவித்தார். ஒன்றிய அரசின் சொலிசிட்டர் துஷார் மேத்தா, ‘பேரறிவாளன் விடுதலை தொடர்பான கோப்புகளின் நிலவரம், இந்த விவகாரத்தில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம் என்னென்ன, ஆளுநர் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தியது ஏன்? ஆகியவை தொடர்பாக ஒன்றிய அரசிடம் விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்,’ என்று கூறினார். அப்போது, குறுக்கிட்ட நீதிபதி நாகேஸ்வர ராவ், ‘இதிலாவது தாமதம் செய்யாமல் விரைவாக தெரிவியுங்கள்,’ என கூறினார். இதையடுத்து, ‘ஒன்றிய அரசின் விளக்கம் கிடைத்ததும், இந்த வழக்கில் முடிவு எடுக்கப்படும்,’ என தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை ஜனவரிக்கு ஒத்திவைத்தனர்.