×

புதிய மசோதா உருவாக்கப்படும் நிலையில் ‘கிரிப்டோகரன்சி’க்கு பாஜக எம்பி எதிர்ப்பு: போதை, விபசாரம், தீவிரவாதத்திற்கு பயன்படுத்தப்படும் என எச்சரிக்கை

புதுடெல்லி: நாட்டில் கிரிப்டோகரன்சிகளை அனுமதித்தால் போதைப்பொருள், விபசாரம், தீவிரவாதத்திற்கு பயன்படுத்தப்படும் என்று ஆளும் பாஜக எம்பி மக்களவையில் தெரிவித்தார். இந்தியாவில் கிரிப்டோகரன்சியை ஒழுங்கு முறைப்படுத்த புதிய மசோதாவை உருவாக்கும் பணியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளதாக சமீபத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கிரிப்ட்டோகரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சி ஒழுங்குமுறை  மசோதா - 2021 என்ற பெயரில் இந்த மசோதா உருவாக்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பல தனியார் கிரிப்டோகரன்சிகளைத் தடை செய்யவும், இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக டிஜிட்டல் கரன்சி உருவாக்கும் திட்டமாகவும் இந்த மசோதா  இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஆளும் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே நேற்று மக்களவையில் கிரிப்டோகரன்சிகளை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு கிரிப்டோகரன்சிகள் தவறான விஷயங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இதனை அனுமதித்தால் தடுக்க முடியாது; காரணம்,

இந்த தொழில்நுட்பத்திற்கான உரிமையாளரோ, நம்பகத்தன்மையோ இல்லை. அப்படி இருக்கையில் எவ்வாறு கிரிப்டோகரன்சிகளை கட்டுப்படுத்த முடியும்? உலக பொருளாதாரத்தை கிரிப்டோகரன்சிகள் நிலைகுலையச் செய்துள்ளன. கிரிப்டோகரன்சிகளை பொருத்தமட்டில் அவை ‘டார்க் நெட்’ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை. அவை போதைப்பொருள், விபசாரம், தீவிரவாதத்திற்கு பயன்படுத்தப்படும் என்பதால், அதனை அனுமதிக்கக் கூடாது’ என்றார்.


Tags : BJP , BJP MP opposes cryptocurrency as new bill draws up: warning of drug, prostitution and terrorism
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு