×

15 மாதங்களுக்கு பின்னர் நெல்லை புதிய பஸ் நிலையம் நாளை திறப்பு: காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நெல்லை: நெல்லை பயணிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான நெல்லை புதிய பஸ் ஸ்டாண்ட், 15 மாதங்களுக்கு பின்னர் நாளை திறக்கப்படுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக புதிய பஸ் நிலையத்தை திறந்து வைக்கிறார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சியில் சந்திப்பு பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், பாளை பஸ் நிலையம், வர்த்தக மையம், டவுன் மார்க்கெட் புதுப்பிக்கும் பணி, தச்சை மண்டல விரிவாக்கப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை புதிய பஸ் ஸ்டாண்ட், புதுப்பிக்கும் பணிகளுக்காக கடந்த 2020 ஆகஸ்ட்டில் மூடப்பட்டது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அந்த பஸ் ஸ்டாண்டில் விரிவாக்கம், கூடுதல் கடைகள், அரங்குகள், அலங்கார வளைவுகள் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் பணிகள் நிறைவுற்ற நிலையில் நெல்லை வேய்ந்தான்குளம் புதிய பஸ் ஸ்டாண்ட் நாளை திறக்கப்படுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் புதிய பஸ்-ஸ்டாண்டை திறந்து வைக்கிறார். அமைச்சர்கள், அதிகாரிகள்  இந் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள அறிவியல் பூங்கா, நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம், பஸ் ஸ்டாண்டின் கூடுதல் கட்டிடங்கள், நெல்லை சந்திப்பு த.மு. சாலையில் உள்ள இரு சக்கர வாகன நிறுத்தம்,

என்ஜிஓ காலனியில் அமைக்கப்பட்டுள்ள சைக்கிளுக்கான தனி சாலை உள்ளிட்ட ரூ.110 கோடி மதிப்பிலான திட்டங்கள் நாளை தொடங்கி வைக்கப்படுகின்றன. திறப்பு விழாவை முன்னிட்டு நெல்லை புதிய பஸ் ஸ்டாண்ட் இன்று சுத்தப்படுத்தப்பட்டு வாழை மரம் மற்றும் அலங்கார தோரணங்கள் அமைக்கப்பட்டு கோலாகலமாக காட்சியளிக்கிறது. திறப்பு விழாவை முன்னிட்டு நெல்லை கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் புதிய பஸ் ஸ்டாண்டை பார்வையிட்டு நிறைவுற்ற பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். புதிய பஸ் ஸ்டாண்ட் 4 நடை மேடைகளிலிருந்து 6 நடை மேடைகளாக அதிகரிக்கப்பட்டுள்ள சூழலில் அங்கு பஸ்கள் நிறுத்தம் மற்றும் வந்து செல்லும் பாதைகள் குறித்து கேட்டறிந்தனர்.

பாளை பெருமாள்புரம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே இட நெருக்கடியில் இயங்கி வரும் தற்காலிக பஸ் ஸ்டாண்டால் சிரமப்பட்டு வரும் பயணிகளுக்கு நெல்லை புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. பாளை பஸ் ஸ்டாண்டும் ஒரு சேர திறக்கப்படுவதால் திருவனந்தபுரம் சாலையில் போக்குவரத்து நெருக்கடி குறைய வாய்ப்புகள் உள்ளன.

Tags : Nelai New Bus Station ,Q. Stalin , New bus station opens tomorrow after 15 months: Chief Minister MK Stalin opens with a video presentation
× RELATED அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள்,...