டிவியில் வந்த ‘டுபாக்கூர்’ விளம்பரத்தை பார்த்து போலி சாமியாரிடம் ரூ38 லட்சத்தை பறிகொடுத்த பெண்: பரிகாரம் செய்வதாக கூறி மோசடி செய்தது அம்பலம்

மும்பை: டிவியில் வந்த ‘டுபாக்கூர்’ விளம்பரத்தை பார்த்து போலி சாமியாரிடம் ரூ38 லட்சத்தை இழந்த மற்றொரு பெண் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். அதையடுத்து போலீசார் வழக்குபதிந்து போலி சாமியாரை தேடி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அடுத்த போரிவலி மேற்கில் வயதான பெற்றோருடன் 48 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 10 ஆண்டாக வேலை கிடைக்காததால் மன அழுத்தத்தில் இருந்தார். மேலும் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம், குடும்ப பிரச்னைகளை தீர்க்க பலரிடம் ஆலோசனை கேட்டு வந்தார். இந்த நிலையில் டிவியில் வரும் சாமியார்களிடம் ஆலோசனை கேட்டால் தனது பிரச்னை தீர்ந்துவிடுமா?

என்ற ஏக்கத்தில் கடந்த 4 ஆண்டுக்கு முன் டிவி-யில் தோன்றிய 70 வயதான சாமியாரை போனில் தொடர்பு கொண்டார். அவர், தான் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் தங்கியிருப்பதாகவும், குடும்ப பிரச்னை, மன அழுத்தம், வேலை கிடைக்க நீங்க பரிகாரம் செய்ய வேண்டும் என்று அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார். இதை நம்பிய அந்த பெண், நான்கு வருடமாக ரூ. 38 லட்சம் தொகையை அந்த சாமியாருக்கு கொடுத்துள்ளார். அவ்வப்போது பரிகாரம் செய்வதாக கூறி, அந்த சாமியாரும் பணத்தை பறித்துள்ளார். இந்நிலையில் அயோத்தியில் உள்ள சாமியாரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தோன்றியது.

அதையடுத்து சாமியார் கொடுத்த முகவரிக்கு கடந்த நவம்பர் 27ம் தேதி அயோத்திக்கு சென்றார். ஆனால், சாமியார் அந்த இடத்தில் வசிக்கவில்லை. அதிர்ச்சியடைந்த அந்த பெண், அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தார். அவர்களும், சாமியார் குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்று கூறிவிட்டனர். அதையடுத்து ஏமாற்றத்துடன் மும்பை திரும்பினார். சாமியாரால் தான் ரூ. 38 லட்சம் ஏமாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக எம்.எச்.பி ேபாலீசில் புகார் அளித்தார். அவர்கள் வழக்குபதிந்து போலி சாமியாரை தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கடந்த 2018ம் ஆண்டு நவம்பரில் தொலைக்காட்சியில் வெளியான டுபாக்கூர் விளம்பரத்தை பார்த்து,

சம்பந்தப்பட்ட சாமியாரை அந்த பெண் தொடர்பு கொண்டுள்ளார். தனக்கு ஏற்பட்ட பிரச்னையை தீர்த்து வைப்பதாக கூறி பல தவணைகளாக ஆன்லைன் மூலம் ரூ. 38 லட்சத்தை அந்த போலி சாமியார் பறித்துள்ளார். இதற்காக பாதிக்கப்பட்ட பெண், தனது நகை, சேமிப்பு பணத்தை எல்லாம் இழந்துள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு வேலையும் கிடைக்கவில்லை. மன அழுத்தமும் குறையவில்லை. தற்போது சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் மூலமாக சம்பந்தப்பட்ட போலி சாமியாரை அடையாளம் கண்டுள்ளோம். அவரை தேடி வருகிறோம்’ என்றனர்.

Related Stories: