×

பண்ருட்டி அருகே 2000 ஆண்டு பழமையான தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் மற்றும் உளுந்தாம்பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் சில வாரங்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது நீர் வற்றத்தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்த ஆற்றுப்பகுதியில் உறைகிணறுகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் பண்ருட்டி தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் மோகன், ரவீந்தர் ஆகியோர் தென்பெண்ணை ஆற்றின் மேற்பரப்பில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 2000 ஆண்டுகள் பழமையான சுடுமண் உருவ பொம்மைகள், வட்டச் சில்லு, சுடுமண் புகை பிடிப்பான், உடைந்த அகல் விளக்கு, சிதைந்த உறைகிணறுகள் போன்ற சங்ககால பொருட்களை கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறியதாவது: தென்பெண்ணை ஆற்றில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பெரிய அளவில் மண்ணரிப்பு ஏற்பட்டது. ஆற்றின் கரைப்பகுதிகளில் வித்தியாசமான பானை ஓடுகள் தென்பட்டது. உளுந்தாம்பட்டு மற்றும் எனதிரிமங்கலம் ஆற்றுப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டபோது சுடுமண்ணால் ஆன இரண்டு மனித உருவங்கள், சுடுமண் மிருக உருவம், வட்ட சில்லு, அகல் விளக்கு, சிதைந்த உறைகிணறு ஆகியவற்றை கண்டுபிடித்தோம். உளுந்தாம்பட்டு மற்றும் எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் இரண்டு சுடுமண் மனித உருவங்கள், ஒரு மிருக உருவம் கிடைத்துள்ளது. இரண்டு மனித உருவ சுடுமண்ணில் ஒரு பெண் உருவம் அழகிய காதணியுடன் காட்டப்பட்டுள்ளது.

மற்றொரு சிற்பம் சிதைந்துள்ளது. இன்னொன்று மிருக உருவம். இதுபோன்ற மனித மற்றும் மிருக சுடுமண் உருவங்கள் கீழடி மற்றும் பூம்புகார் ஆகிய பகுதிகளில் அரசு மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கருப்பு சிவப்பு பானை ஓடுகள், உடைந்த அகல் விளக்குகள், சிதைந்த உறைகிணறுகள் உளுந்தாம்பட்டு மற்றும் எனதிரிமங்கலம் பகுதிகளில் கிடைத்துள்ளன. இவை 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்றார்.


Tags : Panruti , 2000 year old archeological find near Panruti
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு