×

காய்கறிகள் விலை உயர்வு எதிரொலி விராலிமலை வாரச்சந்தை களையிழந்தது-அதிகளவில் மக்கள் வராததால் கடைகள் காற்று வாங்கியது

விராலிமலை : காய்கறி விலை உயர்வு மற்றும் மழை காரணமாக விராலிமலை வாரச்சந்தை நேற்று வாடிக்கையாளர்கள் அதிகமாக வராததால் களையிழந்து காணப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை புதிய பேருந்து நிலையம் அருகே வாரத்தின் முதல் நாள் திங்கள்கிழமை வாரச்சந்தை கூடுவது வழக்கம். அப்பகுதியை சேர்ந்த விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட விளைபொருட்களை விவசாயிகள் சந்தைப்படுத்தி குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் விராலிமலை பகுதி மட்டுமல்லாமல் சுற்றுப் பகுதிகளிலிருந்து வாடிக்கையாளர்கள் விராலிமலை வாரச்சந்தைக்கு வந்து காய்கறி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வாங்கி செல்வார்கள். இதனால் அன்றைய தினம் சந்தைக்குள் மட்டுமல்லாது விராலிமலை கடைவீதி உள்ளிட்ட பகுதிகளிலும் கூட்ட நெரிசலாக காணப்படும். ஆனால் தற்போது தொடர்மழை, காய்கறி விலை ஏற்றம் உள்ளிட்டவைகளால் அப்பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையினால் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருவதால் காய்கறி உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தி குறைந்து வருகிறது. இதனால் குறைந்த அளவே காய்கறிகள் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.

கடந்த காலங்களில் ஒரு கிலோ ரூ.40, 60 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் தற்போதைய விலை ஒரு கிலோ ரூ.160 வரை விற்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு காய்கறி மேல் உள்ள மோகம் குறைந்து வருகிறது. இதன் வெளிப்பாடாக நேற்று காலை தொடங்கிய விராலிமலை வாரச்சந்தை களை இழந்து காணப்பட்டது. வழக்கம்போல் வார நாட்களில் திங்கள்கிழமை இயங்கும் இந்த வாரச்சந்தையில் சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகள் விரிக்கப்பட்டு பரபரப்புடன் இயங்கும் நிலையில் நேற்று 250 கடைகள் மட்டுமே விரிக்கப்பட்டிருந்தன. அதிலும் குறைவான காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன.

பெரும்பாலான இல்லங்களில் உணவுக்கு முக்கிய பங்காற்றும் தக்காளியை பெயரளவுக்கு மட்டுமே பயன்படுத்தும் நிலை இருந்து வருகிறது. இதனால் சுவையான உணவு உண்ண முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாக குடும்ப தலைவர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. தொடர்ந்து விலையேற்றம் கண்டு வரும் காய்கறி விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும், உழவர் சந்தையை தனி கவனம் செலுத்தி தினசரி காய்கறி உள்ளிட்ட பொருட்கள் அங்கு கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதே இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Viralimalai , Viralimalai: The Viralimalai weekly market was weeded out yesterday due to high vegetable prices and rains.
× RELATED விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் பூச்சொரிதல் விழா