×

தேனி மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழை-பள்ளிகளில் புகுந்தது மழைநீர்: வீட்டுச் சுவர்கள் இடிந்தன

தேனி : தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொட்டிய மழையால், பள்ளிகளில் மழைநீர் புகுந்தது. வீட்டுச்சுவர்கள் இடிந்து விழுந்தன. விளைநிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி அருகே உப்பார்பட்டி பிரிவில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக தேனி அரசினர் சட்டக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.  நேற்று முன்தினம் இரவு இப்பள்ளி மற்றும் அரசு சட்டக்கல்லூரி அருகே உள்ள வெள்ளக்கரடு பகுதியில் கனமழை பெய்தது. அங்கிருந்து வெள்ளம் கரைபுரண்டு வீரபாண்டி செங்குளம் கண்மாய் நோக்கி ஓடையில் பெருக்கெடுத்து வந்தது. ஆனால், ஓடையில் இருந்து வரும் நீர்வெளியேற முடியாமல் பள்ளி வளாகத்திற்குள்ளும், பள்ளி அருகே உள்ள தோட்டங்களுக்குள்ளும் புகுந்தது.

இதில், பள்ளியி்ன் வடக்கு பகுதியில் சுமார் 20 அடி நீள காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்தது. சுவர் இடிந்து விழுந்த பகுதியில் இருந்து பள்ளி மற்றும் சட்டக்கல்லூரிக்குள் தேங்கியிருந்த மழைநீர் வெள்ளமென பாய்ந்து தேனி- கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓடையை சென்றடைந்தது. இப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில், ‘வெள்ளக்கரட்டில் இருந்து வரும் ஒடையானது பள்ளி மற்றும் தற்காலிகமாக செயல்படும் அரசு சட்டக்கல்லூரி வளாகத்திற்குள் வரும்.

ஆனால் பள்ளி நிர்வாகம் ஒடையை மறைத்து கட்டிடம் எழுப்பியுள்ளதால்தான் நீர்வெளியேற முடியாமல் அருகே உள்ள தோட்டங்களுக்குள் புகுந்தது என்றனர். பொதுமக்களின் கூற்று உண்மையா என்பதை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்வதுடன் மாவட்டம் முழுவதும்  உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  
அரசு பள்ளியில் புகுந்த மழைநீர் உத்தமபாளையம் அருகே ராமசாமி நாயக்கன்பட்டியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால், தண்ணீர் செல்ல வழியின்றி தேங்கியது. பி.டி.ஆர்.கால்வாய், மீன்பிடிக்கும் ஆக்கிரமிப்பாளர்களால், முள்வேலி போடப்பட்டுள்ளது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால், கனமழை கொட்டியபோது, மழைநீர் முழுவதும் ராமசாமிநாயக்கன்பட்டி அரசு ஆரம்பபள்ளி மற்றும் குடியிறுப்புகளுக்குள் புகுந்தது. இதனை அடுத்து, ஊராட்சி தலைவர் பவுன்ராஜ் தலைமையில், குடியிறுப்பு இடங்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றினர்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.கனமழைக்கு வீடு இடிந்து சேதம்: வருசநாடு: கடமலை- மயிலை ஒன்றியம் முத்தாலம்பாறை ஊராட்சியில் உள்ள உப்புத்துறை கிராமத்தில் நேற்று  பெய்த கனமழையால் கூலித்தொழிலாளி கருப்பசாமி வீடு இடிந்து சேதம் அடைந்தது. தகவலறிந்து ஊராட்சி மன்ற தலைவர் அமுதா அய்யனன் மயிலாடும்பாறை வருவாய் ஆய்வாளர் முருகன், ஊராட்சி செயலர் மகாலிங்கம் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதேபோல் சோலைத்தேவன்பட்டி, மேகமலை, தும்மக்குண்டு, உள்ளிட்ட பகுதிகளில் மழையால் வீடுகள் இடிந்து விட்டது. மேலும், கனமழையினால் கடமலை மயிலை ஒன்றியத்தில் வீடுகள் சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா? மயிலாடும்பாறை வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வின்போது கடமலை மயிலை ஒன்றியத்தில் கிராம அலுவலர்கள் மேகமலை அன்பழகன், கடமலைக்குண்டு கிராம அலுவலர் வீரய்யா, மயிலாடும்பாறை கிராம அலுவலர் பரசுராம் மற்றும் தலையாரிகள் ஊராட்சி தலைவர்கள் ஆய்வுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

சக்கம்பட்டி அரசு பள்ளிக்கு விடுமுறை

ஆண்டிபட்டி அருகே, சக்கம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய பலத்த மழை கொட்டியது. இதனால், பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் குளம்போல் தேங்கியது. சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. நேற்று காலை பள்ளிக்கு வந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியில் மழைநீர் தேங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பள்ளிக்கு நேற்று விடுமுறை அளித்தனர். இப்பள்ளியில் பலத்த மழை காலங்களில் தண்ணீர் தேங்குவது வழக்கமாக உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Theni district ,Vidya-Vidya , Theni: Heavy rains lashed schools in Theni district yesterday. The walls of the house collapsed. In the fields
× RELATED தேனி மாவட்டம் அகமலை ஊராட்சிக்கு...