×

திருவாரூரில் தோட்டக்கலைத்துறை சார்பில் பயனாளிகளுக்கு அரசின் மானிய விலையில் காய்கறி விதைகள், இடுபொருட்கள்-அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்

திருவாரூர், : திருவாரூரில் தோட்டக்கலைத்துறை சார்பில் அரசின் மானிய விலையில் காய்கறி விதைகள் மற்றும் இடுபொருட்களை பயனாளிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.திருவாரூர் மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில் ஊட்டசத்து தளைகள் மற்றும் காய்கறி விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையிலும், எம்எல்ஏ.பூண்டிகலைவாணன், மாவட்ட ஊராட்சித்தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் பயனாளிகளுக்கு காய்கறி விதைகள் மற்றும் ஊட்டச்சத்து தழைகளை வழங்கி உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது, தமிழகத்தில் கிராம மற்றும் நகர்புறங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் வீட்டுத்தோட்டங்கள் மற்றும் மாடிப்பகுதிகளில் காய்கறிகள், பழங்கள் மற்றும் மூலிகைப்பயிர்கள் பயிரிட்டு பயன்பெறும் விதமாக முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கை முறையில் மேம்படுத்த ஊட்டச்சத்து தழைகள் வழங்கும் திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள்வேளாண் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டன.

அதன்படி மாடித்தோட்டம் அமைக்க தேவையான இடுபொருட்கள், 6 வகை காய்கறி விதைகள், செடி வளர்க்கும் பைகள், தென்னைநார் கட்டிகள் ,உயிர் உரங்கள்,உயிரி கட்டுப்பாட்டு காரணிகள்,இயற்கை பூச்சிக்கொல்லி என ரூ.900 மதிப்புடைய பொருட்கள் ரூ.225க்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் திருவாரூர் மாவட்ட நகரப்பகுதிகளில் உள்ள 500 இல்லத்தரசிகள் பயன்பெற உள்ளனர். நடப்பாண்டு இத்திட்டம் 3 ஆயிரம் ஊரகப்பெண்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படவுள்ளது.

மேலும் உணவே மருந்து என்ற கூற்றின் படி மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி பல்வேறு நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மூலிகைச்செடிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியுடைய பழங்கள் மற்றும் காய்கறிகளான பப்பாளி, எலுமிச்சை, முருங்கை, கறிவேப்பிலை, திப்பிலி, சோற்று கற்றாழை, கற்பூரவள்ளி மற்றும் புதினா ஆகிய 8 செடிகள் கொண்ட ஊட்டசத்து தளைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. நடப்பாண்டு இத்திட்டம் ஊரகப் பெண்கள் 4 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில் செயல்படுத்தபட உள்ள நிலையில் ரூ.75க்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. மானிய விலையில் வழங்கப்படும் இந்த திட்டத்தினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர்வெங்கட்ராமன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் மன்னார்குடி அருகே கருவாக்குறிச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய போது அவருக்கு முதலுதவி அளித்து உயிரை காப்பாற்றிய மன்னார்குடி அரசு மருத்துவமனை செவிலியர் வனஜா என்பவரை அமைச்சர் சக்கரபாணி பாராட்டினார்.

Tags : Horticulture Department ,Thiruvarur ,Minister ,Chakrabarty , Thiruvarur: Minister Chakrabarty on behalf of the Horticulture Department in Thiruvarur distributed vegetable seeds and inputs to the beneficiaries at subsidized rates.
× RELATED வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்காக...