ஆத்தூர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் கொன்று புதைக்கப்பட்ட விவசாயியின் சடலம் எலும்புக்கூடாக ஆற்றில் மீட்பு

*சடலத்தை தோண்டி எடுத்து ஆற்றில் வீசிய 2 பேர் கைது

*சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்

ஆத்தூர் : நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த அரியாக்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சுப்பு (எ) சுப்பிரமணி (74). திருமணம் செய்து கொள்ளாத இவர், கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி மாயமானார். இதுபற்றி அவரது வாரிசுதாரரான தம்பி மகள் கனகா என்பவர் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். கோர்ட் உத்தரவின்பேரில் நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்பகனூரில் உள்ள சுப்பிரமணிக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை வாங்குவதில் ஏற்பட்ட பிரச்னையில், ஆத்தூரை சேர்ந்த பிரபல சாராய வியாபாரி பெருமாள் (55), தனது ஆதரவாளர்களான ராமதாஸ் (27), அறிவழகன், சக்திவேல், 19 வயது வாலிபர் உள்பட 6 பேருடன் சேர்ந்து, சுப்பிரமணியை மிரட்டி சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு அவரை அடித்துக்கொலை செய்து புதைத்தது தெரியவந்தது.

இதையடுத்து, இந்த வழக்கு ஆத்தூர் போலீசுக்கு மாற்றப்பட்டது. இந்த கொலை தொடர்பாக ராமதாஸ், அறிவழகன் மற்றும் 19 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதில் ராமதாஸ், அறிவழகன் ஆகியோரை சடலம் புதைக்கப்பட்ட சக்திவேலுக்கு சொந்தமான இடத்திற்கு அழைத்துச்சென்று தேடிப் பார்த்தனர். ஆனால், உடல் கிடைக்காததால் ராமதாஸ் உள்பட 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைமறைவான பெருமாள், சக்திவேல், நரசிங்கபுரத்தை சேர்ந்த தினேஷ், ஓலப்பாடியை சேர்ந்த முஸ்தபா ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் தினேஷ் ஆத்தூர் குற்றவியல் நீதிபதி ரங்கராஜன் முன்னிலையிலும், முஸ்தபா ஆத்தூர் ரூரல் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் முன்னிலையிலும் சரணடைந்தனர்.

இதனிடையே, சிறையில் அடைக்கப்பட்ட ராமதாஸ், அறிவழகனை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று மீண்டும் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சடலம் கிடைக்கவில்லை. முஸ்தபாவை நேற்று முன்தினம் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த பெருமாள், சக்திவேல் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் சரணடைவதற்காக சேலத்தில் பதுங்கி இருப்பதாக ஆத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் சேலத்தில் பதுங்கி இருந்த பெருமாள் மற்றும் சக்திவேல் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று நேற்று காலை சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சினிமா பாணியில் சடலம் புதைப்பு:

விவசாயி கொலை சம்பவம், கமல்-கவுதமி நடித்த பாபநாசம் படம் போல் நடந்துள்ளது. அந்த படத்தில் தனது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரியின் மகனை கொன்று புதைப்பார்கள். ஆனால் போலீசார் தேடும்போது அங்கு சடலம் இருக்காது. அதேபோலத்தான் விவசாயி சுப்பிரமணியையும் கொன்று உடலை மாற்றி வைத்துள்ளனர். 6 பேரும் சேர்ந்து விவசாயி சுப்பிரமணியை கொன்றுள்ளனர்.

இதையடுத்து அவரது உடலை சக்திவேலின் தோட்டத்தில் அனைவரும் சேர்ந்து புதைத்துள்ளனர். இதையடுத்து 4 பேருக்கும் தெரியாமல் சக்திவேலும், பெருமாளும் சேர்ந்து சடலத்தை தோண்டி எடுத்து வேறு இடத்தில் புதைத்துள்ளனர். அங்கும் போலீசார் கண்டுபிடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மீண்டும் அவரது உடலை தோண்டி எடுத்து சாக்கு மூட்டையில் கட்டி வசிஷ்ட நதியில் வீசியுள்ளனர்.

வசிஷ்ட நதியில் வீசியுள்ளதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு தேடினர். அப்போது, நதியின் ஓரமாக சாக்கு மூட்டை கிடந்துள்ளது. அதனை மீட்ட போலீசார் அந்த மூட்டையில் எலும்புகூடு இருந்தது. அதனை சேகரித்து சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டரான கோகுலகண்ணன் தலைமையில், அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், கிணற்றில் வீசியதாக கூறப்பட்ட சதைகள் உள்ளிட்ட கழிவுகளை மீட்க போலீசார் நீர்மூழ்கி கேமரா மூலம் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுப்பிரமணி சடலத்தின் மண்டை ஓடு கிடைக்காததால், இறந்தவர் சுப்ரமணிதான் என்பதை உறுதிப்படுத்த முடியாது என்பதால், அதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலம்

கைதான பெருமாள் மற்றும் சக்திவேல் ஆகியோர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:போலீசாரிடம் ராமதாஸ், அறிவழகன் மாட்டிக்கொண்டதால், அவர்கள் எங்களை காட்டிக் கொடுத்து விடுவார்கள் என்ற அச்சத்தில் சக்திவேல் தோட்டத்தில் புதைக்கப்பட்ட சுப்ரமணியின் சடலத்தை தோண்டி எடுத்தோம். அதில் கிடைத்த எலும்புக்கூடுகளை சாக்குமூட்டையில் கட்டி டூவீலரில் எடுத்துச் சென்று ராமநாயக்கன்பாளையம் அருகேயுள்ள வசிஷ்ட நதியில் வீசினோம். மேலும், சுப்ரமணி உடலை தோண்டியபோது சதைகள் அழுகிக் கிடந்தது. அதனை தனியே எடுத்து சக்திவேலின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் வீசிவிட்டு தலைமறைவாகிவிட்டோம், நீதிமன்றத்தில் சரணடையலாம் என சேலத்தில் இருந்த எங்களை போலீசார் கைது செய்துவிட்டனர். இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: