விருதுநகர், திருவில்லிபுத்தூரில் மழைக்கு வீடுகள் இடிந்து முதியவர், குழந்தை பலி

விருதுநகர் : விருதுநகர் அருகே செங்கோட்டையை சேர்ந்தவர் காளியப்பன் (85). மனைவி இறந்து விட்டார். இவருக்கு 4 மகன்கள், ஒரு மகள். இதில் 2 மகன்கள், மகள் இறந்து விட்ட நிலையில் காளியப்பன் தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக பெய்த மழையால், இவர் தங்கி இருந்த மண் வீடு, நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய காளியப்பன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். ஆமத்தூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மகன் தெய்வேந்திரபாண்டியன் புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவில்லிபுத்தூர் அருகே காடனேரியை சேர்ந்தவர் காளீஸ்வரன். கூலித்தொழிலாளி. இவரது மகள் முத்து ஈஸ்வரி (3). இவர் நேற்று காலை வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்த போது வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. படுகாயமடைந்த முத்து ஈஸ்வரி, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் டிச. 3ம் தேதி 14 வீடுகள், 4ம் தேதி 7 வீடுகள், 5ம் தேதி 6 வீடுகள் உட்பட மொத்தம் 31 வீடுகள் மழைக்கு இடிந்து சேதமடைந்தன. பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி திருவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Related Stories: