இனி விலங்குகள் உயிர்பலி இருக்காது!: மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம்..!!

கோவை: யானைகள், மான்கள் மற்றும் சிறுத்தை புலிகள் உள்ளிட்ட விலங்குகளை பாதுகாப்பதற்காக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான சாலையில், நாள்தோறும் 8,500 வாகனங்கள் பயணிக்கின்றன. இருமருங்கிலும் உள்ள காப்புக்காட்டில் இருந்து வெளியே வரும் யானைகள், கரடிகள், காட்டு மான்கள், காட்டு மாடுகள் இந்த சாலையை கடக்கும் போது அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு அவை உயிரிழக்கின்றன. இதனை தடுக்க மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் 2.4 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் கட்டப்பட உள்ளது.

மேட்டுப்பாளையம் கல்லாரில் இருந்து, 2வது கொண்டை ஊசி வளைவு வரை இந்த மேம்பாலம் கட்டப்பட இருக்கிறது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து விரிவான அறிக்கை தயாரிக்கும் பணிக்கு மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வு பணி இந்த மாதம் 15ம் தேதி கல்லாரில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்திற்குள் தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் இந்த விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. 36 அடி அகலத்தில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள இந்த மேம்பாலம், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் கெடுதல் இல்லாத வகையில் கட்டப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories: