வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பு தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: தென் தமிழகம் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழையின் தொடர்ச்சியாக வங்கக் கடலில் நிலவிய ஜாவத் புயல் கொல்கத்தா அருகே நேற்று முன்தினம் கரையைக் கடந்து சென்றதால், தற்போது வறண்ட வானிலை நிலவுகிறது. இந்நிலையில், தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதியில் மேலடுக்கு சுழற்சி நீடித்து வருகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

அதிகபட்சமாக மணப்பாறை பகுதியில் நேற்று முன்தினம் இரவில் மட்டும் 270 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதுதவிர மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இந்நிலையில், தென்  தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதியில் தொடர்ந்து நீடித்து வரும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியால் இன்றும்  தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதுதவிர கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும். சென்னையில் நேற்று சில இடங்களில் லேசான மழை பெய்த நிலையில், இன்றும் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழைபெய்யும் வாய்ப்புள்ளது.

Related Stories: