×

சென்னை விமான நிலையத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரிசோதனை நேரம் குறைவு: பயணிகளுக்கு கூடுதல் வசதிகள்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஒமிக்ரான் பரிசோதனைக்காக பயணிகளின் காத்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் சில மாநிலங்களில் ஒமிக்ரான் பரவ தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இந்த வைரஸ் நுழையாமல் தடுக்க விமான நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 1ம் தேதி முதல் ஆபத்து அதிகமாக உள்ள லண்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகள், ஆபத்து குறைவாக உள்ள இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட 44 நாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் ஆர்டி-பிசிஆர் டெஸ்ட் எடுக்கும் பயணிகள் 6 முதல் 7 மணி வரையிலும், ரேபிட் டெஸ்ட் எடுக்கும் பயணிகள் 1 மணி நேரம் வரையிலும் காத்திருக்கும் நிலை இருந்தது.  இதுகுறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து விமான நிலையத்தில் டெஸ்ட் எடுத்து காத்திருக்கும் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காத்திருக்கும் நேரமும் குறைக்கப்பட்டது. அதன்படி ஆர்டி-பிசிஆர் டெஸ்ட் எடுக்கும் பயணிகளுக்கு 5 முதல் 6 மணி நேரத்திற்குள்ளும், ரேபிட் டெஸ்ட் எடுக்கும் பயணிகளுக்கு 30 நிமிடம் முதல் 45 நிமிடத்திற்குள்ளும், மாற்று உள்நாட்டு விமானங்களில் செல்லக்கூடிய டிரான்சிஸ்ட் பயணிகளுக்கு 20 நிமிடங்களிலும் ரிசல்ட் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு குடியுரிமை, சுங்கச்சோதனை பிரிவுகளில் கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டு, பயணிகள் தாமதமில்லாமல் மருத்துவ பரிசோதனை பகுதிக்கு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மருத்துவ பரிசோதனை முடிந்து காத்திருக்கும் பயணிகள் பகுதியில் இருக்கைகள் எண்ணிக்கை 450ல் இருந்து 500ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் நியாயமான விலையில் காபி, ஸ்நாக்ஸ் கிடைக்க ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை, வைஃபை, இலவச டெலிபோன் வசதிகள், பொழுபோக்கு சேனல்களுடன் டிவி, விமானங்கள் வருகை, புறப்பாடு திரைகள், வெளிநாட்டு பணங்களை மாற்றுவதற்கான கவுன்டர்கள் போன்றவைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 700 முதல் 800 பயணிகளுக்கு சோதனைகள் நடத்தப்படுகிறது.மேலும் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai Airport , At the Chennai airport Omigron virus Less test time: Additional facilities for passengers
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...