தனியார் கடைகளில் அதிக விலைக்கு விற்பதன் எதிரொலி பண்ணை பசுமை கடைகளில் தக்காளி 70க்கு விற்பனை: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் தக்காளி தனியார் கடைகளில் அதிக விலைக்கு  விற்கப்படுவதையொட்டி, பண்ணை பசுமை கடைகளில் 70 முதல் 95 வரை விற்க  தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.தமிழகத்தில் தக்காளி விலை  கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து அமைச்சர்  ஐ.பெரியசாமி துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:தமிழகத்தில்  பருவமழை காரணமாக காய்கறிகள் குறிப்பாக தக்காளியின் விலை உயர்வை  கட்டுப்படுத்தி மக்களுக்கு மலிவு விலையில் தரமான காய்கறிகள் மற்றும்  தக்காளி கிடைக்க தமிழக அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கூட்டுறவு  துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி கிலோ 85  முதல் 100 வரை குறைவான விலையில் தரமாக நவம்பர் மாத்தில் பொதுமக்களுக்கு  விற்பனை செய்ய முதற்கட்டமாக நாளொன்றுக்கு 15 மெட்ரிக் டன் தக்காளி மற்றும்  இதர காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது  மீண்டும் தமிழகத்தின் பல பகுதிகளிலும், அண்டை மாநிலங்களிலும் தொடர் மழை  காரணமாக  தக்காளி வரத்து குறைந்ததால், மீண்டும் தக்காளி 120 முதல்  130க்கு வரை வெளிச்சந்தையில் விற்கப்படுகிறது.கூட்டுறவுத்துறை  நடத்திவரும் 65 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் நேற்று உத்தேசமாக 10  மெட்ரிக் டன் தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு 70 முதல் 95 கிலோவிற்கு  விற்பனை செய்யப்பட்டது.பொதுமக்கள்  பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தரமான தக்காளி மற்றும் காய்கறிகள்  மலிவான விலையில் விற்கப்படுவதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

Related Stories:

More