×

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒரே கருவியில் டயாலிசிஸ் செய்யும் முறை தொடக்கம்: இந்தியாவில் முதன்முறையாக அறிமுகம்

சென்னை: இந்தியாவில் முதன்முறையாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுநீரகவியல் துறை சார்பில் ஒரே கருவி மூலம் டயாலிசிஸ் செய்யும் கருவியை நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ஒரு நபருக்கு டயாலிசிஸ் எனப்படும் ரத்த மறுசுழற்சி அடிப்படையில் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. ஒரு நபருக்கு ரத்த சுத்திகரிப்பு முறையானது குறைந்தது 3 நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்படும். அதிகபட்சமாக வாரம் ஒருமுறை மாற்றப்படும். இதற்காக உடலில் ஒரு கருவி பொருத்தப்படும். அந்த கருவியை மறுசுழற்சி மூலம் 6 முதல் 8 முறை சுத்தம் செய்து பயன்படுத்த முடியும். அவ்வாறு சுத்தம் செய்யும் போது நோயாளிக்கும், டாக்டர்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால், இந்தியாவில் முதன்முறையாக ஒரே கருவி மூலம் டயாலிசிஸ் செய்யும் கருவி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தொற்று பரவாது, பாதுகாப்பானது. கொரோனா காலத்தில் கொரோனா அல்லாத தொற்றா நோய்களிலும் கவனம் செலுத்தி முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் 37.83 லட்சம் பேர் உயர் ரத்த அழுத்தம், 15.68 லட்சம் பேர் ரத்த அழுத்தம், 10.69 லட்சம் பேருக்கு நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தமும், நீரிழிவும் இணைந்து 7.82 லட்சம் பேர், இதர நோய்களுடன் 3.62 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவை சிறுநீரக நோய் தொற்று பாதிப்பு ஏற்பட காரணமாகிறது.

முதுநிலை 2ம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது கவலையளிக்கிறது. கலந்தாய்வு நடத்துவது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. ஜனவரி 6ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதன் பிறகு அகில இந்திய இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெற்ற பிறகு மாநில கலந்தாய்வு நடைபெறும். நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது என்பதையும் மருத்துவ மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பாலியல் புகார் வந்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட டாக்டரை மருத்துவமனை டீன் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார். மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.



Tags : Dialysis ,India , Kilpauk Government Hospital One-Dial Dialysis: In India Introduced for the first time
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...