கோவையில் வைர வளையல்கள், 7 சவரன் திருட்டு வழக்கு கைவிலங்கை வெல்டிங் செய்து அகற்றி விசாரணை கைதியை மீட்டு சென்ற கும்பல்: தள்ளுமுள்ளுவில் போலீசார் படுகாயம்; ஆம்பூர் அருகே நடுரோட்டில் பரபரப்பு

ஆம்பூர்: கோவையில் வைர வளையல்கள், 7 சவரன் திருட்டு வழக்கில் ஆம்பூர் அருகே உள்ள வாலிபரை குனியமுத்தூர் போலீசார் விசாரணைக்காக கைது செய்தனர். இந்நிலையில் அங்கு வந்த விசாரணை கைதியின் ஆதரவாளர்கள் அவரது கைவிலங்கை வெல்டிங் செய்து அகற்றி மீட்டு சென்றனர். கோவை அடுத்த குனியமுத்தூரில் மூதாட்டி ஒருவரின் வீட்டில் கடந்த அக்டோபர் 11ம் தேதி, 2 வைர வளையல்கள் மற்றும் 7 சவரன் தங்க நகைகளை மர்மநபர் திருடிச் சென்றுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த குனியமுத்தூர் போலீசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டை சேர்ந்த கணேஷ் என்பவருக்கு தொடர்புள்ளதாக போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

இதனால், அவரை விசாரணைக்கு அழைத்து செல்ல குனியமுத்தூர் போலீசார் 3 முறை ஆம்பூர் வந்துள்ளனர். ஆனால், கணேஷை பிடிக்க இயலாத நிலையில் நேற்று காலை மீண்டும் ஆம்பூர் வந்தனர். தொடர்ந்து குனியமுத்தூர் போலீஸ் எஸ்ஐ ஞானபிரகாசம் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் ஆம்பூர் அடுத்த எல்.மாங்குப்பம் பகுதியில் காத்திருந்தனர். அப்போது, அங்கு வந்த கணேஷை மடக்கி பிடித்த குனியமுத்தூர் போலீசார் கைவிலங்கிட்டு காரில் ஏற்றினர். இதைப்பார்த்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிலர் போலீசாரிடம் நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கணேஷை மீட்க காரில் இருந்து இழுத்துள்ளனர். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் போலீஸ்காரர் ராஜா முகமது மற்றும் உடனிருந்த எஸ்ஐ ஞானபிரகாசம், வடிவேல் ஆகியோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், கணேஷை அவரது ஆதரவாளர்கள் அருகில் இருந்த வெல்டிங் கடைக்கு அழைத்து சென்று கைவிலங்கை வெட்டி அங்கிருந்து அழைத்து சென்றதாக தெரிகிறது.  மேலும், படுகாயமடைந்த போலீசார் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உம்ராபாத் போலீஸ் நிலையத்திற்கு சென்று குனியமுத்தூர் போலீசார் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, டிஎஸ்பி சரவணன் தலைமையிலான போலீசார் தப்பிச்சென்ற கணேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: