×

30 நிமிடத்தில் ஆர்டி-பி.சி.ஆர் ‘ரிசல்ட்’: டெல்லி விமான நிலையத்தில் அறிமுகம்

புதுடெல்லி: வெளிநாட்டில் இருந்து இந்தியா வருவோரால் ஒமிக்ரான் பரவி வரும் நிலையில், 30 நிமிடத்தில் முடிவுகளை அளிக்கும் விரைவு ஆர்டி-பி.சி.ஆர் டெஸ்ட் இயந்திரங்களை டெல்லி விமான நிலையத்தில் ஒன்றிய அமைச்சர் பார்வையிட்டார். இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதால், நாடு  முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய பயணிகளை பரிசோதித்ததில் அவர்களில்  பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

அவர்களின் ரத்த  மாதிரிகள் ஒமிக்ரான் வைரஸ் மரபணு உடன் ஒத்து போகிறதா? என்று ஆய்வு  நடத்தப்பட்டதில் முதன்முதலாக கர்நாடகாவை சேர்ந்த இருவருக்கு ஒத்து போனது.  அதேபோல் குஜராத், டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை சேர்ந்த  பயணிகளில் சிலருக்கும் ஒமிக்ரான் வைரஸ் அறிகுறி இருந்தது. இதுவரை நாடு  முழுவதும் 21 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார  அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெல்லி ஐ.ஜி.ஐ விமான நிலையத்தில் நடத்தப்படும் ஆர்டி-பி.சி.ஆர் சோதனை வசதிகளை நேற்றிரவு ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மதிப்பாய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘ஐ.ஜி.ஐ விமான நிலையத்தில் ஆபத்து பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டி-பி.சி.ஆர் சோதனை செய்யப்படுகிறது. டெர்மினல் - 3ல் மட்டும் முப்பத்தைந்து விரைவு ஆர்டி-பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் முறையான ஸ்கிரீனிங் செய்யப்பட்டு, அதன்பின்னர் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவர். இதன் மூலம் பரிசோதனை நேரத்தை 30 நிமிடங்கள் வரை குறைக்க முடியும்’ என்று கூறினார்.


Tags : Delhi Airport , RT-PCR ‘Result’ in 30 Minutes: Introduction at Delhi Airport
× RELATED விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட தனியார் கம்பெனி நிர்வாக இயக்குனர்