×

குடியிருப்பை பெண்கள் விடுதியாக மாற்றுவதாக புகார்; நடிகர் சோனு சூட்டுக்கு நோட்டீஸ்: மும்பை மாநகராட்சி அதிரடி

மும்பை: மும்பையில் உள்ள ஆறு மாடி குடியிருப்பை பெண்கள் விடுதியாக மாற்றுவதாக வந்த புகாரையடுத்து நடிகர் சோனு சூட்டுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளளது.
மும்பையின் ஜுஹுவின் ஏபி நாயர் சாலையில் உள்ள சக்தி சாகர் பகுதியில் பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான ஓட்டல் செயல்பட்டு வந்தது. இந்த ஓட்டல் மாநகராட்சியின் முறையான அனுமதியின் பேரில் கட்டப்படவில்லை. ஏற்கனவே இந்த ஓட்டல் குடியிருப்பாக இருந்தது. மாநகராட்சியின் அனுமதியின்றி செயல்பட்ட ஓட்டல் விவகாரம் ெதாடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதனால் ஓட்டலை மீண்டும் குடியிருப்பாக மாற்றிவிடுவதாக சோனு சூட் ஒப்புக் கொண்டார். அதற்காக ஏழு நாட்களுக்குள்  மாநகராட்சியின் திட்டத்தின்படி கட்டிடத்தை கட்டமைப்பை மீட்டெடுப்பதாக உறுதியளித்தார். ஆனால், அதன்படி மீண்டும் குடியிருப்பாக மாற்றுவதற்கான பணிகளை முடிக்கவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர் கணேஷ் குஸ்முலு என்பவர் லோக் ஆயுக்தாவில் புகார் அளித்துள்ளார். அதில், ‘கட்டிடத்தில் அனுமதிக்கப்பட்ட மறுசீரமைப்பு பணிகள்  நடைபெறவில்லை.

ஓட்டல் இப்போது பெண்கள்  விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. லோக் ஆயுக்தாவின் உத்தரவையும் மீறி கட்டிட பணிகள் நடக்கின்றன. மும்பை மாநகராட்சி வெறும் அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, விதிமீறல்களை கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டியுள்ளது. எனவே, சோனு சூட்  மீதும் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும்’  என்று கூறினார். இந்த நிலையில் மும்பை மாநகராட்சி நிர்வாகம் சோனு சூட்டுக்கு அனுப்பிய புதிய நோட்டீசில், ‘தற்போதுள்ள ஆறு மாடி கட்டிடத்தில் குடியிருப்பு நோக்கங்களுக்காக மட்டுமே சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

உங்களது பணிகளை கடந்த அக். 20ம் தேதி நாங்கள் ஆய்வு செய்தோம். நீதிமன்ற உத்தரவுபடி நீங்கள் பணிகளை இன்னும் முடிக்கவில்லை. எனவே, இதுதொடர்பாக முறையான விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சோனு சூட் கூறுகையில், ‘கட்டிட மறுசீரமைப்பு பணிகள் நடக்கிறது. அங்கீகரிக்கப்படாத எந்தவொரு பணியையும் மேற்கொள்ளவில்லை. குடியிருப்பு கட்டிடமாகதான் மாற்றிக் கொண்டுள்ளேன்’ என்றார்.



Tags : Sonu Suit , Complaint that the residence is being converted into a women's hostel; Notice to actor Sonu Suit: Mumbai Corporation Action
× RELATED ஒற்றை காலில் ஒரு கி.மீ குதித்து...