அரசமைப்புச் சட்ட விதிகளை மீறி சட்டங்கள் இயற்றுவதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்: மாநிலங்களவையில் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. உரை

டெல்லி: அரசமைப்புச் சட்ட விதிகளை மீறி சட்டங்கள் இயற்றுவதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதா மீது டி.கே. எஸ். இளங்கோவன் எம். பி. உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; இந்த மசோதா, எனக்கு முன்னர் பேசிய நண்பர் குறிப்பிட்டதைப் போல, அரசமைப்புச் சட்டம் பிரிவு 252க்கு முரண்பட்டதாகும். இது போன்ற சட்டத்தை முன்மொழியு முன் மாநில அரசுகளின் வெளிப்படையான ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த அரசு மாநிலங்களின் ஒப்புதலைப் பெறவில்லை. நாங்கள் இப்பொழுது அணைகளின் பாதுகாப்பு குறித்து பேசுவதைவிட மாநில அரசுகளின் அரசமைப்பு சார்ந்த உரிமைகளின் மீது ஒன்றிய அரசு செய்யும் தாக்குதலைப் பேசுவதுதான் முக்கியம் எனறு கருதுகிறேன்.

அதுதான் இன்றைய ஒரே கேள்வியாக இருக்கிறது. துணைத் தலைவர் அவர்களே! மழைக் காலங்களில் தண்ணீரை ஒரிடத்தில் தேக்கி வைத்து அதனை வேளாண்மைக்குப் பயன்படுத்தும் சிந்தனை தமிழகத்தில்தான் முதன் முதலில் தோன்றியது என்று பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் சோழர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கல்லணைதான் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் அணையாகும். அந்த அணை இன்றளவும் வலிமையாக உள்ளதோடு சிறப்பான பயன்பாட்டிலும் உள்ளது. எனவே, அணை கட்டுவது என்பது தமிழ்நாட்டுக்குப் புதியதல்ல.

அணையைக் கட்டுவதும் பராமரிப்பதும் எங்களுக்குத் பழக்கமான ஒன்று. என் நண்பர் திரு. அல்போன்ஸ் அவர்கள் தன்னுடைய உரையில், தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரை நாங்கள் தருவோம் என்று குறிப்பிட்டார். ஆனால் அவருடைய உரையில் குறிப்பிடத்தக்க ஒன்றாக நான் கருதுவது முல்லைப் பெரியார் அணை பாதுகாப்பாக இல்லை என்றால் கேரள அரசு புதிதாக அணை கட்டித் தரும் என்றார். ஒன்றிய அரசின் மூலமோ அல்லது ஒன்றிய அரசின் மேற்பார்வையிலோ அந்த அணை கட்டப்படாது என்பதுதான் அவருடைய உரையின் சாரமாக நான் கருதுகிறேன். முல்லைப் பெரியார் அணை வலிமையாக இருக்கிறதா அல்லது இல்லையா என்பது இரு மாநிலங்கள் முடிவு செய்ய வேண்டிய ஒன்றாகும். அந்த மாநில மக்கள் எங்களுக்கு எதிரிகள் அல்ல.

இன்றைய பிரச்னை என்னவென்றால் தமிழ்நாடு தன்னுடைய நீர்த் தேவைகளுக்காக அண்டை மாநிலங்களை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை ஏற்பட்டிருப்பதற்கு முக்கிய காரணம் நாடு விடுதலை அடைந்த பிறகு மொழிவாரி மாநிலங்கள் உருவானதுதான். விடுதலைக்கு முன் மதராஸ் மாகாண அரசால் இந்த  அணை கட்டப்பட்டது. அந்த காலகட்டத்தில் சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் காவிரி நீர் பங்கீடு ஏற்பட்டது. அதுபோலவே திருவாங்கூர் சமஸ்தானத்தின் அனுமதியோடு மதராஸ் மாகாண அரசு முல்லைப் பெரியார் அணையைக் கட்டியது.

இந்த இரண்டு ஒப்பந்தங்களும் தமிழகத்தின் தண்ணீர்த் தேவைக்காக ஏற்படுத்தப்பட்டன. எங்களைப்  பொறுத்தவரை கேரள மக்கள் எந்தப் பிரச்னைகளும் இன்றி பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதுதான். அதனால்தான் நாங்கள் உச்சநீதி மன்றத்தின் உதவியை நாடினோம். உச்சநீதி மன்றம் நிபுணர் குழுவை அனுப்பி அணையை சோதனை செய்து அணை வலுவாக இருக்கிறது என்று தெரிவித்தது. இப்பொழுதுகூட அணை வலுவிழந்து இருக்கிறது என்று யாரேனும் தெரிவித்தால் அணையை சரி செய்வது மாநில அரசின் கடமை. ஏனெனில் அணை மாநில அரசின் சொத்து. இந்த மசோதாவிலேயே அது குறிப்பிடப்பட்டுள்ளது.

அணையிலோ அல்லது அதன் கட்டமைப்பிலோ ஏதேனும் குறை ஏற்பட்டால் அணையின் உரிமையாளர் என்ற வகையில் மாநில அரசுதான் அதனை சரி செய்ய வேண்டும். ஒன்றிய அரசு அணையைப் பாதுகாக்க சட்டம் இயற்றுகிறது. ஆனால் மாநில அரசின் சார்பில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்களைப் பாதுகாக்க ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வருமா என்று கேட்க விரும்புகிறேன். ஏனெனில் எந்தக் கட்டிடம் இடிந்தாலும் உயிர்ச் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இவர்கள் மக்களுக்காக இந்தச் சட்டத்தைக் கொண்டு வரவில்லை. எங்களுடைய அச்சத்துக்குக் காரணம் என்னவென்றால் தண்ணீர் பங்கீட்டில் நாங்கள் தொடர்ந்து பிரச்னைகளைச் சந்தித்து வருகிறோம்.

ஒவ்வொரு முறையும் நாங்கள் நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலையில் உள்ளோம். தொடக்கத்தில் ஒரு ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு செல்லுமா என்ற கேள்வி எழுந்தது. இப்பொழுது அணையின் வலிமை குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. உலகம் முழுவதும் ஆற்று நீரை கீழ்ப் பாசனப் பகுதிகளுக்குச் செல்லாமல் தடுப்பது சட்டத்துக்குப் புறம்பானது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. உங்களுக்குத் தெரியும் நைல் நதி உலகிலேயே மிக நீண்ட நதியாகும். எகிப்து நாட்டில் தொடங்கி பல நாடுகளைக் கடந்து தென் ஆப்ரிக்கா வரை செல்கிறது. ஆனால் இடைப்பட்ட நாடுகள் எவையும் நைல் நதி நீரைத் தடுப்பதில்லை. அவர்களுக்கு வேண்டிய நீரை மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள்.

நாங்கள் பல முறை நதிநீர் பிரச்னைக்குத் தீர்வு காண நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒன்றிய அரசு எங்களுக்கு உதவ முன்வருவதில்லை. மாநில மக்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் வாழ வேண்டும் என்று நீங்கள் கருதினால் அணைகளின் மீது அக்கறை காட்டுவதை விட்டு விட்டு தண்ணீர் பகிர்மானத்தில் அக்கறை செலுத்துங்கள். அணைகளை அதன் உரிமையாளர்கள் என்ற வகையில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அவற்றின் பாதுகாப்பை மாநிலங்கள் உறுதி செய்யும். அது மாநிலங்களின் பிரச்னை.

அடுத்து, அரசமைப்புச் சட்டம் பிரிவு 252ன் படி, நீங்கள் இதுபோன்ற மாநிலப் பட்டியலில் உள்ளபொருள் குறித்து சட்டம் இயற்ற வேண்டுமெனில் மாநிலங்களிடம் முதலில் ஒப்புதல் பெற வேண்டும். நீங்கள் ஏன் மாநில அரசுகளை மதிக்க மறுக்கிறீர்கள்? அரசமைப்புச் சட்டம் அட்டவணை 7ன் படி மாநிலப் பட்டியலில் உள்ள துறைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கல்வி தொடங்கி பல உரிமைகள் ஒன்றிய அரசால் கைப்பற்றப்பட்டுள்ளன. மாநில அரசுகளும் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுகள்தான். மாநில நிர்வாகத்தை எப்படி நடத்துவது என்று தெரிந்தவர்களிடம்தான் மக்கள் மாநில ஆட்சியை ஒப்படைத்திருக்கிறார்கள்.

எனவே அரசமைப்புச் சட்ட விதிகளை மீறி சட்டங்கள் இயற்றுவதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். இது போன்ற சட்டங்கள் நீதி மன்றத்துக்குச் செல்லக் கூடிய நிலையும் ஏற்படலாம்.எனவே தயைகூர்ந்து இந்தச் சட்டத்தைத் தேர்வுக்குழுவுக்கு அனுப்பி அவர்களுடைய கருத்துக்களையும் கேளுங்கள் இவ்வாறு கூறினார்.

Related Stories: