×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 16 கண் மதகு வழியாக 3,000 கனஅடி நீர்திறப்பு

மேட்டூர்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று விநாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 20,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அங்குள்ள மெயினருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் அதிகமாக கொட்டுகிறது. பாதுகாப்பு கருதி, அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை நீடிக்கும் நிலையில், பரிசல் சவாரிக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 17,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 20,400 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால், உபரிநீர் போக்கியான 16 கண் மதகு வழியாக 3000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்திற்காக 400 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

Tags : Mettur Dam , Increase in Mettur Dam: 3,000 cubic feet of water released through 16 eye canals
× RELATED மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: ஈஸ்வரன்!