குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது

நெல்லை : குற்றாலத்தில் இரண்டு தினங்களாக மழை ஓய்ந்ததையடுத்து அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் வரத்து கட்டுக்குள் வந்தது தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலத்தில் கோயில் மற்றும் சன்னதி பஜார் பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது பழைய குற்றாலத்திலும் படிக்கட்டுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. மத்தளம்பாறை பகுதியில் விளை நிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது.

 இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக மழை சற்று ஓய்ந்தது. நேற்று பகல் முழுவதும் நல்ல வெயில் காணப்பட்டது. மாலையில் விட்டு விட்டு மழை பெய்தது. அருவிகளில் தண்ணீர் வரத்து கட்டுக்குள் வந்தது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் நன்றாக பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.

புலி அருவியில் சற்று குறைவாக ஒரே பிரிவில் மட்டும் தண்ணீர் விழுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. மெயினருவியில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அடித்து வரப்பட்ட கல் மண் உள்ளிட்டவற்றை பேரூராட்சி பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே அருவிகளில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

டிசம்பர் மாதத்திற்குள் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் உறுதியளித்துள்ளார். ஒமிக்ரான், கோவிட் மூன்றாவது அலை எதிர்பார்ப்பு, இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதில் குறைந்து வரும் ஆர்வம், 2 டோஸ் தடுப்பூசிகள் போட்டுக் கொண்ட பிறகும் மூன்றாவதாக பூஸ்டர் ஊசி தேவைப்படுமா என்ற விவாதம்  போன்ற சூழல்களுக்கு நடுவில் குற்றாலம் பகுதியில் உள்ள பொதுமக்கள் வியாபாரிகள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரத்திற்கு உரிய வழி காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக உள்ளது.

Related Stories: