×

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறியாளர்களின் 7 ஆண்டு கூலி பிரச்னையை தீர்த்து வைத்த முதல்வருக்கு நன்றி-பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

சோமனூர் : கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் கோம்பக்காடுபுதூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த விசைத்தறிகூலி பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தி தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.விசைத்தறிசங்க தலைவர் தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் குமாரசாமி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், துணை செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் பூபதி மற்றும் கிளைச் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கோவை திருப்பூர் மாவட்டத்தில் 2.50 லட்சம் சாதாரண விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதில், சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் கூலிக்கு நெசவு செய்து சம்பளம் பெற்று வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டில் இருந்து இந்த விசைத்தறி சங்க நிர்வாகிகள் கூலி உயர்வு கேட்டு போராடி வருகின்றனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளும் கூலி உயர்வு ஏற்படுத்தித் தராமல் கடந்த ஆட்சிகாலத்தில் நிர்வாகம் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி  அமைச்சர் முபெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, திருப்பூர் கலெக்டர் வினீத், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் மீனா மற்றும் தொழிலாளர் இணை ஆணையர் லீலாவதி ஆகியோர் முன்னிலையில் கடந்த மாதம் 24ம் தேதி கோவை கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் விசைத்தறியாளர்களும், ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். தொழில் நலன் கருதி அனைத்து ஜவுளி உற்பத்தியாளர்களும் கூலி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டது.  இதில், சோமனூர் ரகத்திற்கு 23 சதவீதமும், மற்ற ரகங்களுக்கு 20 சதவீதமும் கூலி உயர்வு இந்த மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது.
இது சம்பந்தமாக விளக்க பொது உறுப்பினர் கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:கடந்த 7 ஆண்டுகளாக கூலி உயர்வு இல்லாமல் கடும் நெருக்கடியில் தொழில் செய்து வந்த விசைத்தறியாளர்களின் பிரச்னைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு சென்றவுடன் தீர்த்து வைத்த அவருக்கு விசைத்தறியாளர்களின் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர்கள், கோவை, திருப்பூர் கலெக்டர்கள், உயர் அதிகாரிகள், தொழிலாளர் அதிகாரிகள், நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

விவசாயத்திற்கு அடுத்த பெரும் தொழிலான கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி தொழிலுக்கென்று கைத்தறி தொழில்களுக்கு இருப்பதைப் போன்றே தனி அமைச்சகமும், தனி வாரியமும் அமைத்து விசைத்தறியாளர்களையும் ஏழை தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும்.பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் விசைத்தறியாளர்கள் நலன் கருதி இந்த கூலி உயர்வை வழங்க முன்வந்து தொழிலை பாதுகாக்க அனைத்துப் பகுதி ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் இப்பொதுக்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Tags : Chief Minister ,Coimbatore, Tiruppur district ,General Body , Somanur: Coimbatore, Tiruppur District Wage Weaving Loom Owners Association General Committee Members Meeting
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...