×

ஆற்காடு அருகே சுகாதாரத்துறை சார்பில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணி தீவிரம்-30 பேர் குழு வீடு, வீடாக சென்று சோதனை

ஆற்காடு : ஆற்காடு அருகே சுகாதாரத்துறை  சார்பில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.ஆற்காடு அடுத்த வேப்பூர் பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.  வேப்பூர் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் நேற்று நடந்த துவக்க நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் டி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சுபலட்சுமி சிவா, துணைத்தலைவர் ரஞ்சித் குமார் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பூச்சியியல்  வல்லுனர் செந்தில்குமார் கலந்து கொண்டு டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை துவக்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது, புகை மருந்து அடிக்கும்போது டெங்கு காய்ச்சலை பரப்பும் உயிர் கொசுக்களும்,  அபேட் மருந்து போடும்போது கொசுப்புழுக்களும் அழிக்கப்படுகிறது. ஆனால், முட்டையாக உள்ளபோது எந்த தடுப்பு நடவடிக்கையும் செய்ய இயலாது. தண்ணீர் நிறைந்திருக்கும் அனைத்து வகையான  பாத்திரங்களின் உள்பகுதியில் அடி முதல் மேல் வரை முழுவதும் தேங்காய் நார் போன்றவற்றால் தேய்த்து கழுவ வேண்டும். இதை ஒவ்வொரு மூன்றாவது நாளும் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே கொசு முட்டை வெளியே வருவது தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர்கள் சுப்பிரமணி, சத்தியநாராயணன்,  ஜெயக்குமார்  ஆகியோர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சுகாதார குழுவினர் மேற்கொள்ள வேண்டிய டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர். இந்த பணியில் 30 பேர் கொண்ட குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து வீடு, வீடாக சென்று டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுப்புழுக்களை கண்டறிந்து ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, வீடுகளின் அருகே தண்ணீர் தேங்கி உள்ளதையும்,  தேவையற்ற பொருட்கள் இருப்பதையும் அப்புறப்படுத்தினர். அதேபோல், வீடு, வீடாக சென்று தொட்டிகளில் தேக்கி வைத்துள்ள தண்ணீரில் கொசுப்புழு ஒழிப்பு மருந்தை தெளித்து, கிருமிநாசினி மற்றும் புகை மருந்து அடிக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

மேலும், கொரோனா தொற்று  பரவல்,  அதனால் ஏற்படும் பாதிப்புகள், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கிக்கூறி, அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கட்டாயம் தடுப்பூசி போட்டு கொண்டு அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Tags : Department ,Adam , Arcot: Dengue mosquito eradication work is in full swing near Arcot on behalf of the health department.
× RELATED சென்னையில் பேருந்து நிறுத்தங்களில்...