×

பெரம்பலூர் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு அறுவடை துவங்கியது-மூட்டைக்கு ரூ.150 குறைந்ததால் விவசாயிகள் கவலை

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு அறுவடை தொடங்கியது. தொடர் மழையால் அறுவடைக்கு முன்பே அழுகும் அபாயத்தில், மூட்டைக்கு ரூ.150 விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளவர்.மானாவாரி பயிர் சாகுபடியை நம்பியுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் மலையடிவார கிராமங்களிலும், ஆற்றோர கிராமங்களிலும் மரவள்ளி பயிர்கள் பெருமளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஆற்றோர பகுதிகளான திருவாளந்துறை, பசும்ப லூர், இனாம் அகரம், பிம்பலூர், நெய்குப்பை, மலையடிவார கிராமங்களான அரசலூர், அன்னமங்கலம், விசுவக்குடி, பூஞ்சோலை, முகமதுபட்டணம், தொண்டமாந்துறை, கோரையாறு, மாஞ்சோலை, மலையாளபட்டி, பூமிதானம், வெட்டு வால்மேடு, கொட்டாரக்குன்று, அ.மேட்டூர், சத்திரமனை, லாடபுரம், நாவலூர், இரட்டைமலை சந்து, மேலப்புலியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் நடந்து வருகிறது.

மரவள்ளிக் கிழங்குகளை பொறுத்தமட்டில் 8 மாத பயிரான குங்குமரோஸ், 10 மாத பயிரான முள்ளுவாடி என்றிருந்தாலும், 12 மாத பயிரான தாய்லாந்து ஒயிட் என்ற ரகமே அதிகம் பயிரிடப்பட்டு வருகிறது.ஒரு வருட பயிரான மர வள்ளிக்கிழங்கு ஜனவரி, பிப்ரவரியில் அறுவடைக்கு வரும். தற்போது வழக்கத்திற்கு மாறாக வலிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை கொட்டித்தீர்த்ததால் வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

இதனால் கிழங்கு அழுகிவிடும் அச்சம் ஏற்பட்டுள்ளதால் 2மாதத்திற்கு முன்பே அறுவடை செய்யும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அறுவடை செய்து வழக்கம்போல் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, சின்னசேலம் பகுதியிலுள்ள ஜவ்வரிசி ஆலைகளுக்கும் வேப்பந்தட்டை தாலுகா மலையாளப்பட்டி பகுதியிலுள்ள ஜவ்வரிசி ஆலைகளுக்கும் மழைக்கு தப்பிப்ப மரவள்ளிக் கிழங்குகளை எடுத்து ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

வழக்கமாக 75 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ரூ.450ம், ரூ.500ம் பெறப்பட்ட நிலையில் தற்போது ரூ.300க்கும் ரூ.350க்கும் ஆலைகளால் பெறப்படுகிறது. இதன் காரணமாக மரவள்ளிக்கிழங்கு சாகுபடியாளர்கள் மிகுந்த விரக்தியில் உள்ளனர். இதனால் பெருநஷ்டம் ஏற்படாதிருக்க பலர் சைக்கிள்களில் தூக்கி சுமக்கும் சிறு வியாபாரிகளுக்கு ஊர் ஊராக சென்றுவிற்க, சில்லரையாக விற்பனை செய்து வருகின்றனர்.

தொடர் மழைக்கு பாதிக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்குக்கு, மக்காச்சோளம், பருத்தி பாதிப்புக்கு கணக்கெடுப்பு செய்து இழப்பீடு வழங்குவது போல் மரவள்ளிக்கிழங்கு வயல்களையும் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். மேலும் மரவள்ளிக் கிழங்கிற்கு உரிய விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Perramulur district , Perambalur: Cassava harvesting has started in Perambalur district. At risk of rotting before harvest due to continuous rains,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 50க்கும்...