வாழப்பாடி சுற்றுப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்திய 6 பேருக்கு ₹1.20 லட்சம் அபராதம்

வாழப்பாடி : வாழப்பாடி சுற்று வட்டார பகுதியில் சந்தன மரங்களை வெட்டிய 6பேரை வனத்துறையினர் பிடித்து, அவர்களிடம் 4கிலோ சந்தன மரங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.வாழப்பாடி அருகே சிங்கிபுரம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சத்தியானந்த் (25) என்பவரின் விவசாய நிலத்தில், கடந்த 15ஆண்டுகளாக வளர்த்து வந்த, 10 சந்தன மரங்களை மர்ம நபர்கள், கடந்த 24ம் தேதி வெட்டிச் சென்றனர். அதன் எடை சுமார் 200 கிலோ இருக்கும் என தெரிய வந்தது. இது குறித்து சத்தியானந்த் கொடுத்த புகாரின் பேரில், வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் வாழப்பாடி வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கோதுமை வனப்பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தொடர்ந்து சந்தன மரங்களை வெட்டி கடத்திய, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சேர்ந்த பழனிசாமி மகன் விஜயகாந்த்(22), பொன்னுசாமி மகன் அருண்குமார்(23), குப்பன் மகன் சந்திரன்(21), சின்னுசாமி மகன் பாஸ்கர்(23), சின்னுசாமி மகன் சபாபதி(22), முத்துசாமி மகன் மோகன்(24) உள்ளிட்ட 6பேரை வாழப்பாடி போலீசார் மற்றும் வனத்துறையினர் கைது செய்தனர்.

இவர்கள் வாழப்பாடி பகுதியில் சந்தன மரங்களை வெட்டியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த 4கிலோ சந்தனமரம் மற்றும் மரங்களை வெட்ட பயன்படுத்திய ஆயுதங்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து நபர்கள் ஒருவருக்கு ₹20 ஆயிரம் வீதம் 6பேருக்கு ₹1.20லட்சம் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.

Related Stories: