×

தமிழகத்தில் கடந்த 6 மாத காலத்தில் 7.52 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது-அமைச்சர் சக்கரபாணி தகவல்

திருவாரூர் : தமிழகத்தில் கடந்த 6 மாத காலத்தில் 7 லட்சத்து 52 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று திருவாரூர் திருமண மண்டபம் ஒன்றில் கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தலைமையிலும், எம்எல்ஏ பூண்டிகலைவாணன் மற்றும் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் ஆயிரத்து 72 பயனாளிகளுக்கு ரூ. ஒரு கோடியே 98 லட்சத்து 56 ஆயிரத்து 290 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கி பேசியதாவது, தமிழக மக்களின் நலன் காக்கும் திட்டங்களை நிறைவேற்றி மக்களுக்கான அரசாக தமிழக முதல்வர் தலைமையிலான அரசு திகழ்ந்து வருகிறது. அந்த வகையில், இன்றையதினம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இம்மாவட்டமானது விவசாயம் சார்ந்த மாவட்டமாகும். அதில் நெல் விவசாயம் முக்கிய தொழிலாக செய்து வருகிறது. ஆட்சிபொறுப்பேற்ற உடனேயே 12 ஆண்டுகளுக்கு பின்பாக நெல்லின் ஆதாரவிலையை குறுவைக்கு ரூ.1960 என்பதை ரூ.2060 என முதல்வர் உயர்த்திவழங்கி இருக்கிறார்.

அதேபோல் பொது ரகத்திற்கு ஆதாரவிலையை ரூ.1940 என்பதை ரூ.2015 என உயர்த்தி வழங்க உள்ளார். கடந்தஆண்டைவிட இந்த ஆண்டு குறுவைசாகுபடியில் 3 லட்சம் டன் நெல் கூடுதலாககொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய பணமும் விவசாயிகளுக்கு உடனடியாக செல்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. கொள்முதல் செய்யப்படும் நெல் உடனடியாக அரவை ஆலைக்கு அனுப்ப வேண்டும். பாதுகாக்கப்பட்ட கட்டிடங்களில் சேமித்து வைக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளதன் பேரில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் முதல்வரின் அறிவிப்பிற்கு ஏற்ப தமிழகத்தில் 5 இடங்களில் ஒருஆலைக்கு 500 மெ.டன் நெல் அரைக்கின்ற வகையில் திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் புதிய அரிசி ஆலைகள் அமைக்கப்படவுள்ளன. அதேபோல் ரூ.100 கோடிசெலவில் 800 மெ.டன் நெல் அரைக்கின்ற வகையில் மேற்கண்ட 5 மாவட்டங்களில் ஏதாவது ஒரு இடத்தில் அரிசி ஆலை நிறுவ இருக்கிறோம். நுகர்வோர் வாணிபகழகத்தின் மூலமாக 21 மாடர்ன் ரைஸ் மில் இயங்கிவருகிறது.

அதில் தரமானஅரிசி அரைக்கின்ற வகையில் கலர் சாட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் நிறுவன அரிசி ஆலைகளுக்கும் கலர் சாட்டர் பொருத்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும் குடும்பஅட்டைக்கு விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அந்தவகையில் இதுவரை 7 லட்சத்து 52 ஆயிரம் நபர்களுக்கு குடும்பஅட்டைகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் டிஆர்ஒ சிதம்பரம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, திருவாரூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா, பழனியாண்டவர் திருக்கோயில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu ,Minister ,Chakrabarty , Thiruvarur: The Minister of Food has said that 7 lakh 52 thousand new ration cards have been issued in the last 6 months in Tamil Nadu
× RELATED தென்காசியில் திமுக வேட்பாளர் ராணி...