×

ஜி-23 தலைவர்களில் ஒருவர் காங். மூத்த தலைவர் ஆசாத் தனி கட்சி தொடங்க திட்டம்?...ஆதரவாளர்களுடன் ஆலோசனை

ஜம்மு:  காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத். ஜம்மு காஷ்மீர் முதல்வர், ஒன்றிய அமைச்சர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் என, காங்கிரசில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். கட்சி அமைப்புகளுக்கும், தேசிய தலைவர் பதவிக்கும் தேர்தல் நடத்தும்படி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இவர் உட்பட காங்கிரசை சேர்ந்த 23 மூத்த தலைவர்கள் கடந்தாண்டு கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, இவர் கட்சி தலைமையின் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கருதப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் முழுவதும் சமீப காலமாக இவர் சுற்றுப் பயணம் செய்து, தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்.

அதோடு, ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் காங்கிரசில் முக்கிய பதவிகளை வகித்து வந்த இவருடைய ஆதரவாளர்கள், கட்சியில் சீரமைப்பு மேற்கொள்ளும்படி வலியுறுத்தி  சில தினங்களுக்கு முன் திடீரென கூண்டோடு ராஜினாமா செய்தனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் விரைவில் ஆசாத் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது. ஆனால், இதை அவர் மறுத்துள்ளார். அதே நேரம், ‘அரசியலில் இப்போதுள்ள சூழ்நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது,’’ என்றார். ஆசாத்தின் இந்த கருத்து் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


Tags : G-23 ,Kang ,Asad , Chairman, Congress, Senior Leader, Azad, Advisory
× RELATED மக்களை திசை திருப்ப ஆதாரமற்ற அவதூறு...