×

2வது இன்னிங்சிலும் நியூசி. திணறல்: இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்; அஷ்வின் மீண்டும் அசத்தல்

மும்பை: இந்திய அணியுடனான 2வது டெஸ்டில், 540 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து, 2வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்து தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது. முன்னதாக, இந்தியா 2வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 276 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
வாங்கடே மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அகர்வால் 150, கில் 44, அக்சர் 52 ரன் விளாசினர். நியூசிலாந்து பந்துவீச்சில் அஜாஸ் படேல் 10 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார்.

இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 62 ரன்னில் பரிதாபமாக சுருண்டது.முதல் இன்னிங்சில் 263 ரன் முன்னிலை பெற்றாலும், பாலோ ஆன் கொடுக்காமல் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 2வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 69 ரன் எடுத்திருந்தது. மயாங்க் 38, புஜாரா 29 ரன்னுடன் 3ம் நாளான நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 107 ரன் சேர்த்தது. அகர்வால் 62 ரன் (108 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்), புஜாரா 47 ரன் (97 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அஜாஸ் சுழலில் ஆட்டமிழந்தனர்.  

அடுத்து கில் - கேப்டன் விராத் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 82 ரன் சேர்த்தனர். கில் 47 ரன், ஷ்ரேயாஸ் 14, விராத் 36 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். சாஹா 13 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஜெயந்த் 6 ரன் எடுத்து அஜாஸ் பந்துவீச்சில் அவரிடமே பிடிபட்டார். இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 276 ரன் என்ற ஸ்கோருடன் 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது (70 ஓவர்). அதிரடியாக விளையாடிய அக்சர் படேல் 41 ரன்னுடன் (26 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசி. பந்துவீச்சில் அஜாஸ் 4, ரச்சின் 3 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 540 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து, அஷ்வின் சுழலை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறியது.

லாதம் 6, யங் 20, டெய்லர் 6 ரன்னில் வெளியேறினர். உறுதியுடன் போராடி அரை சதம் அடித்த டேரில் மிட்செல் 60 ரன் (92 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அக்சர் சுழலில் ஜெயந்த் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த டாம் பிளண்டெல் (0) ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். நியூசிலாந்து 3வது நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்துள்ளது. நிகோல்ஸ் 36 ரன், ரச்சின் 2 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 5 விக்கெட் இருக்க இன்னும் 400 ரன் தேவை என்ற நெருக்கடியுடன் நியூசிலாந்து இன்று 4ம் நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Tags : Newsey ,India ,Ashwin , Innings, New Zealand, India, Ashwin
× RELATED டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்: அஷ்வினுக்கு பாராட்டு விழா