பூரியை தொட்டது ஜாவத்: ஒடிசா, மேற்கு வங்கத்தில் கனமழை

கொல்கத்தா: வங்கக்கடலில் உருவான ஜாவத் புயல், ஒடிசா கடற்கரையை நெருங்கியதால் பூரி பகுதியிலும், மேற்கு வங்க கடற்கரையோர பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. தெற்கு அந்தமான் அருகே கடந்த 2ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து, புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு ஜாவத் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல், வடக்கு, வடகிழக்கு திசையில் ஒடிசா மற்றும் அதை ஒட்டிய ஆந்திரப் பிரதேசத்தின் கரையோரமாக நகர்ந்து டிசம்பர் 5ம் தேதி ஒடிசாவின் பூரி அருகே கரை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், ஆந்திராவில் இருந்து நகர்ந்த இப்புயல் நேற்று வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தொடர்ந்து நேற்றிரவு ஒடிசாவின் பூரி பகுதியில் நள்ளிரவில் கரையை நெருங்கியதும் அப்பகுதிகளில் கனமழை கொட்டத் தொடங்கியது. வேகமாக காற்று வீசியது. இதன் பாதிப்பு காரணமாக, மேற்கு வங்கத்திலும் மழை பெய்து வருகிறது. இதன் கடலோர மாவட்டங்களான கொல்கத்தா, ஹவுரா, வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனாஸ், பர்பா, மிட்னபூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

பர்கனாஸ் மற்றும் பர்பா மிட்னபூர் மாவட்டங்களில் கடலோர பகுதி மக்கள் 18,000 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் செய்யப்பட்டிருப்பதாக மாநில பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்றும், நாளையும் கொல்கத்தா உள்ளிட்ட மேற்கு வங்க மாநிலத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஹுக்ளி ஆற்றில் படகு சேவை ரத்து

மேற்கு வங்கத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திக்ஹா, மந்தார்மனி, பக்காலி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள கடற்கரையை ஒட்டி உள்ள ரிசார்ட்களில் சுற்றுலா பயணிகள் செல்ல மாநில அரசு தடை விதித்துள்ளது. மேலும், ஹுக்ளி ஆற்றில் படகு சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. திக்ஹா பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பப்பட்டு, பொதுமக்களுக்கு நேற்று தொடர்ந்து எச்சரிக்கை செய்த வண்ணம் இருந்தனர்.

Related Stories: